விலை அதிகரிப்பின் முன் வரிசையில் நின்றவர்களிற்கு பழைய விலைக்கே எரிபொருள் விநியோகம்: மட்டக்களப்பு எரிபொருள் நிலையத்தில் சம்பவம்!

மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று அதிகாலை 13,000 லீற்றர் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடந்த இரவு முழுவதும் வாகனங்கள் சகிதம் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் நேற்று அதிகாலை பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (26) திகதி அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோலின் விலையானது 50 மற்றும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரவு முழுவதும் காத்துக்கிடந்த மக்களது கஸ்ட நிலையினை உணர்ந்த மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான முத்துக்குமார் செல்வராசா பழைய விலைக்கே தனது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பெற்றோலை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 92 ஒக்டேன் பெற்றோலை பழைய விலையான 420 ரூபாவிற்கும் 95 ஒக்டேன் பெற்றோலை பழைய விலையான 450 ரூபாவிற்குமே விநியோகம் செய்துள்ளார்.

அதே வேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருமாருக்கும், கடந்த 5 நாட்களாக எரிபொருள் இன்றி தமது சேவையை வழங்க முடியாதிருந்த மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 50 பேருக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்கினார்.