அனுர குமார திஸாநாயக்கவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று விஷேட உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையின் கடன் மீளமைப்பு அறிக்கை ஓகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினோம், ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல, வங்குரோத்து அடைந்துள்ள நாட்டை மீட்டெடுப்பதற்காகவே நாங்கள் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளோம்.

பல்வேறு கட்டங்களின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், அது சாத்தியமில்லாத ஒன்றாகும். அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும், ஜனாதிபதியிடம் அந்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும, அனுர குமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.