உக்ரைன் கிழக்கு – டான்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதியான லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமாக லிசிசான்ஸ்க் (Lysychansk) ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் லுஹான்ஸ்க் மாகாணம் முழுமையாக ரஷ்யா வசமானது.

இதையடுத்து உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யப் படைகள் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று உத்தியோகபூா்வமாக அறிவித்தாா்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கேய் ஷொய்கு, டான்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மாகாணம் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, லுஹான்ஸ்க் ரஷ்யாவின் வெற்றியை புடின் அறிவித்தார்.

லுஹான்ஸ்கில் தீவிரமான போரில் பங்கேற்று வெற்றி பெற்ற ரஷ்ய படையினர் ஓய்வெடுத்துக் கொண்டு தங்கள் திறன்களை அதிகரிக்க வேண்டும் என புடின் கூறினாா்.

லுஹான்ஸ்கை தொடா்ந்து, அதையொட்டி உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யா முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

உக்ரைனின் கிழக்கு லிசிசான்ஸ்க் நகரை (Lysychansk) தாங்கள் கைப்பற்றிவிட்டதாக நேற்று முன்தினம் ரஷ்யா அறிவித்தது. ஆனால், நகரம் இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக உக்ரைன் படைகள் அறிவித்தன.

லிசிசான்ஸ்க் நகரம் மீது ரஷ்யா உக்கிர ஷெல் தாக்குதலை நடத்திவருகிறது. ஆனால் நகரம் இன்னமும் ரஷ்யப் படைகளின் வசமாகவில்லை. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை வெற்றிகரமான எதிர்கொண்டு வருகிறோம் என உக்ரைன் கூறியது.

ஆனால் வெற்றிகரமாக நகருக்குள் நுழைந்து நகரின் மையத்தை அடைந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அல்லது ரஷ்யப் படைகள் லிசிசான்ஸ்க் நகர வீதிகளில் அணிவகுத்துச் செல்லும் வீடியோக்களை ரஷ்ய அரசு சார்பு ஊடகங்கள் இரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டன.

ஷெல் வீச்சுக்களால் மோசமாகச் சிதைத்து காணப்படும் லிசிசான்ஸ்க் நகர நிர்வாக மையத்தில் சோவியத் கொடி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவையும் ரஷ்ய ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டன.

இந்நிலையில் தனது தோல்வியை உக்ரைன் நேற்று ஒப்புக்கொண்டது. லிசிசான்ஸ்க் நகரில் இருந்து தங்கள் படைகள் பின்வாங்கிவிட்டதாக உக்ரைன் அறிவித்தது.

தொழில்துறை டான்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதியான லுஹான்ஸ்கில் உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமாக லிசிசான்ஸ்க் இருந்தது.

இதன் அருகில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரை கடந்த மாதம் ரஷ்யா கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.