புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார். 

அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சிங்கள மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் கோரிக்கை விடுத்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, டொலர்களை பெறும் நோக்கில் கட்டாரிலுள்ள தொண்டு நிறுவனமொன்றுக்கு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. 

இதனை வரவேற்கின்றோம். இதேபோல புலம்பெயர் தமிழர்கள்மீதான தடையும் நீக்கப்பட வேண்டும். 

இனவாத நோக்கிலேயே தடைகள் அமுலில் உள்ளன. அது உடைத்தெறியப்பட வேண்டும். அப்போது அவர்களும் இலங்கையில் முதலிடுவார்கள். – எனவும் செல்வம் எம்.பி. யோசனை முன்வைத்தார்.

இலங்கையில் இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியை விரட்ட ஒன்றிணைந்ததுபோல இனப்பிரச்சினையை தீர்க்கவும் மக்கள் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.