100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய வீரர் ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை, 10 நொடிகளுக்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

போட்டியை நிறைவு செய்ததன் பின்னர், யுபுன் அபேகோன் தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

”9.95 நொடிகளில் பந்தயத்தை நிறைவு செய்தேன். இலங்கை வரலாற்றை மாற்றி அமைத்தேன். தெற்காசியாவிலும் அதனை நான் செய்தேன். என்னுடன் இருந்தமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். பல தடவைகள் முயற்சி செய்தேன். இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி.

ஒன்றை கூறிக் கொள்ள வேண்டும். இதற்கான உரிமை எனக்கு உள்ளது. அத்துடன், எனது குழுவிற்கு உள்ளது. இலங்கையில் யாரும் இதற்காக உதவி செய்யவில்லை. இதனை நான் கூற வேண்டும். எனது சாதனை நேரம் பலகையில் தென்படுவதை பார்வையிடுவதற்கு காத்திருந்த, எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என யுபுன் அபேகோன் தெரிவிக்கின்றார்.

யுபுன் அபேகோனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.