நாட்டிலே தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை தலைமைத்துவமாக கொண்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகைஇ ரணிலின் இல்லம் என்பவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைவசப்படுத்திக்கொண்ட நிலையில், பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்க அவரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையக்கப்பட்டது். இச்சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவும், நியாயப்படுத்தவும் முடியாதது.

ஊடகம் ஒரு நாட்டின் பிரதான சக்தியாக இருந்து வரும் வேளையில் உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஊடகங்களை கண்மூடித்தனமாக தாக்குகின்ற அரசின் செயற்பாடு அதிலும் குறிப்பாக பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலை சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.


சம்பவங்களை நீண்ட நாளாக மக்களின் குரலாக பல்வேறு வழிகளிலும் வெளி கொண்டு வந்த ஊடகங்கள், . மிகவும் கொடூரமாக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும், தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் உடன் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளது.