பாகிஸ்தான் உளவுத்துறையினர் அரசியலில் ஈடுபடுவதை முற்றாக நிறுத்த வேண்டும் என உளவுத்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. 

பாக். இராணுவத் தளபதி ஜெனரல் கமார் ஜாவதீ பஜ்வா இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் இது முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத் தகவலை தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சியின் சிரேஷ்ட தலைவரான யஸ்மின் ரஷீட் வெளியிட்டிருப்பதோடு தமது கட்சிக்கு எதிரான வேலைகளில் பாக். உளவுத்துறையினர் லாகூருக்கான கமாண்டரான பிரிகேடியர் ரஷீத் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

இதையடுத்தே பாக். உளவுத்துறை அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பேரில் பதவியிழந்த இம்ரான்கான், தான் சதிமுயற்சி மூலமாகவே வெளியேற்றப்பட்டதாகவும் தான் சுதந்திரமான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை கடைபிடித்ததன் காரணமாகவே அமெரிக்க அனுசரணையுடன் பதவி கவிழ்ப்பு அரங்கேற்றப்பட்டதாவும் கூறி வருகிறார்.

இம் மாதம் 17ம் திகதி பஞ்சாப் மாநிலத்தில் இருபது தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 

இத் தேர்தலில் இம்ரானின் கட்சி அதிக ஆசனங்களைப் பெறுமானால் பஞ்சாப்பில் மாநில அரசை அக்கட்சியால் அமைக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக த எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

பாக். இராணுவம் அந்நாட்டின் 73 வருட வரலாற்றில் அரைவாசி, காலப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொடர்ந்தும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையில் அதன் ஆதிக்கம் தொடர்வதாகக் கூறப்படுகிறது.