நாடறிந்தவராக புகழ் பெறுவதற்கு முன், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு தோல்வி என கருதியதாகவும், தினமும் தற்கொலை எண்ணத்தால் அவதிப்பட்டதாகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹமான் கூறுகிறார்.

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், தனது வாழ்க்கையில் மோசமாக அமைந்த காலகட்டம் தான் துணிவுடன் வெளிவர உதவியதாக கூறுகிறார்.

“25 வயது வரை, நான் தற்கொலை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நம்மில் பலர், நாம் எதற்கும் தகுதியானவர்கள் இல்லை என நினைக்கிறோம். என் தந்தையை இழந்ததால் ஒரு வெறுமை இருந்தது. நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அவை என்னை அச்சமில்லாமல் உருவாக்கியது.

எல்லோருக்கும் மரணம் நிரந்தரமானதாகும். எல்லாமே காலாவதியாகும் தினத்துடன் வந்திருப்பதால், நாம் ஏன் அச்சப்பட வேண்டும்?” என்று பிடிஐயிடம் ரஹ்மான் கூறினார்.

சொந்த ஊரான சென்னையில், தனது வீட்டின் பின்புறம் சொந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவை அமைத்த போது அவருக்கான திருப்பு முனை உண்டானது.

அதற்கு முன், எல்லாமே வெளியே தெரியாமல் இருந்தன. என் தந்தை இறந்தது மற்றும் அவர் பணியாற்றிய விதம் காரணமாக நான் அதிக படங்கள் செய்யவில்லை. எனக்கு 35 படங்கள் வந்தன. 2 படங்கள் தான் செய்தேன். நான் எப்படி தாக்கு பிடிக்கப்போகிறேன் என எல்லோரும் நினைத்தனர். எல்லாவற்றையும் பற்றிக்கொள்ள வேண்டும் என்றனர். எனக்கு அப்போது 25 வயது. என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அது எல்லாவற்றையும் சாப்பிடுவது போன்றது. நீங்கள் மந்தமாகி விடுகிறீர்கள். எனவே கொஞ்சமாக சாப்பிட்டாலும் அது நிறைவாக இருக்க வேண்டும் என்கிறார் ரஹ்மான்.

“நோட்ஸ் ஆப் ஏ டிரீம்: தி ஆத்தரைஸ்டு பயோகிராபி ஆப் ஏ.ஆர்.ரஹ்மான், புத்தகத்தில் ரஹ்மான் தனது வாழ்க்கையில் கடினமான காலம் மற்றும் பிற விஷயங்கள் பற்றி பேசுகிறார். லாண்ட்மார்க் மற்றும் பென்குவின் ராண்டம் ஹவுஸ் ஆகியவற்றுடன் இணைந்து, கிருஷ்ணா திரிலோக் எழுதிய இந்த சரிதைநூல், மும்பையில் வெளியிடப்பட்டது.

ரஹ்மானுக்கு 9 வயது இருந்த போது, அவரது தந்தை இசையமைப்பாளர் பி.கே.சேகர் மரணமடைந்தார். அவரது குடும்பம் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு காலம் தள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக ரஹ்மான இளம் வயதிலேயே இசைக்கு அறிமுகம் செய்து கொண்டார்.

“12 வயது முதல் 22 வயது வரை எல்லாவற்றையும் செய்துவிட்டேன். சாதாரண விஷயங்களை செய்ய அலுப்பாக இருந்தது, நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

20 களில் இருந்த போது, 1992 ல் மணிரத்னம் இயக்கிய ரோஜாவில் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரஹ்மான் தன் குடும்பத்தினருடன் சூபி இஸ்லாமிற்கு மாறினார். அவர் கடந்த காலங்களை பின் தள்ளியதோடு, தனது பெயரான திலீப் குமார் என்பதை மாற்றிக்கொண்டார்.

“என் சொந்த பெயரான திலீப் குமாரை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஏன் அந்த பெயர் பிடிக்கவில்லை என்று கூட தெரியாது. இது என் ஆளுமைக்கு ஏற்றதாக இருக்கவில்லை என நினைத்தேன். இது என் எல்லாவற்றையும் தீர்மானித்து என் முழு இருப்பை மாற்றிவிடும் என நினைத்தேன். கடந்த கால சுமைகளை விலக்க நினைத்தேன்,” என்கிறார் அவர்.

ரோஜா படத்தின் மூலம், திரையுலகில் புகழ் பெற்ற ரஹ்மான், இசை மற்றும் ஒலியின் இலக்கணத்தை மாற்றினார். இசையை உருவாக்குவது உள்ளார்ந்த செயல் என்றாலும் அது தனிமையான செயல் அல்ல.

நீங்கள் யார் என்பதை உணர்ந்து அதை வெளிப்படுத்துகிறீர்கள். எனவே மன புத்தகத்தில் யோசிக்கும் போது, உங்களுக்கு அதிக சுயபரிசோதனை தேவை, உங்களுக்குள் ஆழமாக இறங்க வேண்டும். உங்கள் உள்ளுக்குள் கவனிப்பது கடினமானது. ஆனால் அதை செய்தால், அதை வெளிப்படுத்தி தன்னிலை மறக்க வேண்டும்,” என்கிறார் அவர் மேலும்.
இதன் காரணமாகவே இரவு அல்லது அதிகாலை பணி செய்வதாக ரஹ்மான் சொல்கிறார்.

“நான் ஒரு விஷயத்தில் ஆழமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடிரென கதவு தட்டப்பட்டால், வேறு உலகில் இருந்து நிஜத்திற்கு வருவேன், அந்த இடத்திற்கு மீண்டும் செல்ல முடியாது. இதன் காரணமாக, அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு அல்லது இரவுகளில் பணியாற்றுகிறேன்,”என்கிறார் அவர். தொழிலில் அல்லது தனி வாழ்க்கையில், அலுப்பாக உணர்ந்து, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என உணர்வதே முக்கியம் என்கிறார்.

“ஒரே விஷயத்தை செய்தால் அலுப்பாக இருக்கிறது. செய்வதற்கு மாறுபட்ட விஷயங்கள் வேண்டும். பயணம் செய்வது, பிள்ளைகளை வளர்ப்பது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, இதை அதிகம செய்ய முடியாவிட்டாலும் கூட, மிகவும் அழகானவையாகும். இவை மிகவும் உதவுகின்றன.”