ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய, எதிர்வரும் 13ம் திகதி, புதன் கிழமை, எசல பௌர்ணமி தினத்தன்று, விலகுவதாக சபாநாயகருக்கு தெரிவித்திருப்பதாக செய்தியறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

2022 ஜூலை 9ம் திகதி நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை ஆகியவற்றினுள் நுழைந்து அவற்றைக் கைப்பற்றிய நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீவைத்து எரித்தழித்த பின்புலத்தில், இந்த அறிவிப்புச் செய்தி வந்திருக்கிறது.

இப்படி ஒரு செய்தி வந்துவிட்ட பின்னர் “பதவிவிலகுறார் கோட்டா” என்பதற்கு பிறகு கேள்விக்குறிக்கான தேவை என்ன என்று கேள்வி எழலாம். ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு அதனை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து, அது சபாநாயகருக்கு கிடைக்கும் வரை, பதவி விலகல் என்பது ஒரு செய்தி மட்டுமே. அதன் நிச்சயத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அடுத்தது என்ன என்பது பெருங்கேள்வி. சட்டரீதியாக ஜனாதிபதியை பதவி விலகச் செய்ய ஒரு வழிதான் இருக்கிறது. அது பழிமாட்டறைதல் (impeachment). ஆனால் அது ஒரு நீண்ட காலந்தேவைப்படும் செயற்பாடு. முதலில் ஜனாதிபதி அரசியலமைப்பு குறிப்பிடும் பழிமாட்டறைதலுக்கான குற்றமொன்றைப் புரிந்தார் பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும்.\

அதற்குப் பின்னர் உயர் நீதிமன்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, குறித்த ஜனாதிபதி குறித்த குற்றங்களைப் புரிந்தார் என்று தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் படி, பாராளுமன்றம் மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பழிமாட்டறைதல் தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதி பதவி நீக்கப்படுவார்! பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதனூடாக ஜனாதிபதியை பதவி நீக்க முடியாது. அத்தகைய ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாததற்குக் காரணம், ஜனாதிபதி என்பவர், இங்கு பாராளுமன்றத்தால் நியமிக்கப்படும் ஒருவர் அல்ல. மாறாக அவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

ஜனாதிபதிக்கென தனித்த மக்களாணையொன்றை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்குகிறார்கள். ஆகவே பாராளுமன்றம் அந்த மக்களாணையை இலகுவில் மீறக்கூடியதாக கட்டமைப்பு அமையக்கூடாது என்பதனால்தான் அரசியலமைப்பு இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே மக்களால் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை பதவி விலக்குவது என்பது, இலங்கையின் அரசியலமைப்பு ஏற்பாடுகளின் கீழ், அவ்வளவு இலகுவான காரியமல்ல.
ஆகவேதான் மக்கள் நேரடியாக வீதிக்கிறங்கி கோட்டாவை பதவி விலகுமாறு அழுத்தங்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சட்டரீதியாக செய்ய முடியாதததை, சட்டத்தைத் தாண்டி அரசியல் ரீதியாக சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இது அனைத்தையும் மீறியும் கோட்டா பதவி விலகாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கான நிச்சயமான பதவிலை எவரால் சொல்ல முடியாது.

மறுபுறத்தில் ஜனாதிபதி கோட்டா பதவி விலகிவிட்டால், அடுத்தது என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. ஜனாதிபதி பதவி, அவரது பதவிக்காலத்தின் போது, பதவிவிலகல் அல்லது வேறு காரணங்களினால் வெற்றிடமாகும் போது, இலங்கை அரசியலமைப்பின் படி உடனடியாக பிரதமர் பதில் ஜனாதிபதியாவார். பிரதமர் பதவி வெற்றிடமாக இருந்தால், சபாநாயகர் பதில் ஜனாதிபதியாவார். ஜனாதிபதிபதவி வெற்றிடமாகிய முப்பது நாட்களுக்குள் பாராளுமன்றமானது, ஜனாதிபதியாவதற்கான தகுதிகள் என்று அரசியலமைப்புரைக்கு தகுதிகளைக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, வெற்றிடமாகிய ஜனாதிபதிப்பதவியின் எஞ்சிய பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பார்கள்.

இதற்கு முன்பதாக, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அகால மரணமடைந்தபோது, அப்போது பிரதமராக இருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்க பாராளுமன்றத்தினால், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் எஞ்சிய பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையை ஓ​ர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

மேலும், தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றியும் நிறைய குறிப்பிடப்படுகின்றன. அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைய வேண்டுமானால், அதில் பிரதமர் யார், அமைச்சர்கள் எவரெவர் என்பது முக்கிய கேள்வி. அரசாங்கம் ஒன்று இயங்க வேண்டுமானால், அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் என்பது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தில் அந்த பெரும்பான்மையின் ஆதரவைப் பெறக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி.

இந்த இடத்தில்தான் பெரும் சிக்கல் ஒன்று உருவாகிறது. இன்று ஆர்ப்பாட்டக்களத்தில் முன் நிற்கும் எதிர்க்கட்சிகள் எதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இதுவரை கிடையாது. ஆகவே, கோட்டா பதவி விலகினால், எஞ்சிய பதவிக்காலத்திற்கான ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம்.

இதில், இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷர்களின் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முடிவு என்பது தீர்மானம்மிக்கதாக அமையும் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் கூட, இன்றைய நிலையில் பாராளுமன்றமானது அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதற்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம்.
ஆகவே, இன்று ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னிலை வகிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு முன்னுள்ள பெரும் சவால், பாராளுமன்றத்தில் தமக்கான பெரும்பான்மையை எப்படித் திரட்டிக்கொள்வது என்பதுதான்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாது, அரசாங்கமொன்றை அமைக்க முடியாது, கோட்டா பதவி விலகினால் எஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கான ஜனாதிபதியை தேர்தெடுக்க முடியாது, பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தீர்மானத்தைக் கூட நிறைவேற்றமுடியாது. நாடு அரசியல் ஸ்திரத்தன்மையின்றி தத்தளிக்கும். இதுதான் அடுத்த பெரும் சவால்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இருக்கக் கூடிய ஒரு நம்பிக்கை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து கணிசமானவர்கள் பிரிந்து வருவார்கள் என்பதுதான். ஒரு கப்பல் கவிழும்போது, அதிலிருந்து தப்பித்தோ வௌியே பாய்ந்து தப்பிக்கும் எலிகளைப் போல, மூழ்கும் ராஜபக்‌ஷ கப்பலிலிருந்து பாய்ந்து தப்பிக்கும் எலிகளாக பலர் கட்சிமாறுவார்கள். தம்மை “சுயாதீனர்களாக” அறிவித்துக்கொண்டு, இடைக்கால சர்வ கட்சி அரசாங்கத்திற்கும், அதன் முடிவுகளுக்கும் ஆதரவு தருவார்கள் என்பதுதான் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

ஆனால் இத்தோடு சிக்கல் தீராது. இங்கு எதிர்க்கட்சிகள் என்பது பல. அவற்றில் கொள்கைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் மாறுபட்டவை. ஆகவே கோட்டா பதவி விலகினால் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதே சிச்கலானதொரு கேள்வியாக அமையலாம்.

இங்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை என்று யோசிப்பது ஒருபுறமிருக்க, நாடு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் யார் ஜனாதிபதியாகும் சவாலை ஏற்கப் போகிறார்கள் என்பது யோசிக்க வேண்டியதொரு விஷயம்.

எல்லா விடயங்களையும் கருத்திற்கொண்டு பார்க்கையில், இந்த சிக்கலுக்கான தீர்வுப் புள்ளி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதில்தான் தங்கியுள்ளது. அத்தகைய அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வசன வாக்கெடுப்பில் அங்கிகாரமொன்று பெறப்படவேண்டுமானால், அதனைப் பெற்றுக்கொள்வதற்கு இதனைவிடப் பொருத்தமானதொரு சந்தர்ப்ப சூழல் உருவாகாது.
ஆகவே இது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கான அரிய சந்தர்ப்பமாகக் கருதப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல், அரசியலமைப்பிற்கான அடிப்படைத் திருத்தங்கள் பலவற்றைச் செய்ய சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அங்கிகாரம் தேவை என்று பாதுகாப்பு முட்டுக்கட்டையாக இருந்தது.

இன்று அதனைச் செய்யக் கூடிய யதார்த்த சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால் அதனைச் செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது முக்கிய கேள்வி. இதனை அவர்கள் செய்யாவிட்டால், சர்வ கட்சி அரசாங்கம் என ஆட்சியலமர்ந்தாலும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை எப்படி ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை அவர்கள்தான் மக்களுக்கு விளக்க வேண்டும். நாடு அரசற்ற அராஜகத்திற்கு (anarchy) முற்றாக மூழ்குவதற்கு முன்னதாக நாட்டைக் காப்பாற்றாவிட்டால், இலங்கையின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியே.