ரணில் விக்ரமசிங்கவின் நீண்ட நாள் ஜனாதிபதி கனவு பலிக்குமா? அல்லது அவர் தொடர்ந்தும் சாதாரண தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வாரா?

அதேபோன்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்பாரா? அவரின் சர்வ கட்சி அரசாங்கத்தில் டளஸ் அழகப்பெரும பிரதமராக பதவியேற்பாரா?

ஜேவிபி அனுரகுமாரவின் நிலைப்பாடு என்ன?

இதற்கு மத்தியில் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு காரணமான காலிமுகத்திடம் போராட்டக்காரர்கள் ரணில் மற்றும் சஜித் ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவியேற்பதற்கு தமது ஆசிர்வாதத்தை வழங்குவார்களா? இல்லையெனில் தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா நியமிக்கப்பட்டு, சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படுமா? இவையாவும் இன்னும் இலங்கையில் அரசியல் நிலவரம் ஓரிடத்தில் ஸ்திரமாகவில்லை என்பதையே காட்டுகின்றன.

அரசியலமைப்பின்படி, கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை சொன்னப்படி பதவி விலகினால், பிரதமர் பதவியில் இருந்து விலகாதுவிட்டால், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

அவருடைய அரசாங்கத்தின் பிரதம மந்திரியை நாடாளுமன்றம் தெரிவுசெய்யும். நேற்று வரை இந்த நகர்வுக்காக ரணிலுக்கு 115 பேர் ஆதரவு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆதரவில் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட அனுதாப அலையும் சேர்ந்திருக்கிறது.

மறுபுறத்தில் ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலகினால், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

அவருடடைய ஆட்சியின் பிரதமர் பதவி டளஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்பட இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

எனினும் இதற்காக சஜித்துக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை நேற்று மாலை வரை கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர் பேச்சுவார்த்தைக்காக ரணிலுக்கு ஜனாதிபதி பதவி, சஜித் தரப்பினரால் விட்டுக்கொடுக்கப்படுமா? இதற்கு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இணங்குவார்களா? அல்லது ஏற்கனவே எதிர்கட்சிகள் கோரியபடி, 6 மாதங்களுக்கு சபாநாயகர் ஜனாதிபதியாக செயற்பட்டு, சர்வகட்சி அரசாங்கம் செயற்படும்.

இதனையடுத்து எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.