ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக கூட நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்ததை போராட்டகாரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ரணில் தற்காலிகமாக கூட ஜனாதிபதியாக இருக்கக்கூடாது. ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரை போராட்டம் தொடர்ந்தும் நடத்தப்படும். கோட்டாபய ராஜபக்ச, தனது பாதுகாப்புக்காக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

விரட்டப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார். மக்களின் நிலைப்பாடுகள் மற்றும் ஆணையின் மூலம் அவர் அந்த பதவிக்கு வரவில்லை.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. இதனால், தற்காலிகமாக கூட ரணில் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகிய பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமளிப்போம்

ரணில் விக்ரமசிங்கவை விரட்டும் வரை நாங்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்” எனவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.