லங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு இன்றுகாலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.

இதனையடுத்து, காலை 10.10 அளவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்தப் பதவியை வகித்துவரும் போதே மக்களின் எதிர்ப்பினை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய பிரதமராக பதவி வகித்துவந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 14ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல்கள் சிறப்பேற்பாடுகளின் 11 ஆம் பிரிவின் கீழ், 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.

1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தார்.

1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார்.

28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற அமைச்சரவை அமைச்சு பதவிகளை வகித்தார்.

1989 ஆம் ஆண்டு மார்ச் 06 முதல் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 7 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்திருந்தார்.

அவர் முதன்முறையாக 1993 மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார். இவர் இரண்டாவது தடவையாக 2001 டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதிவரையும், மூன்றாவது தடவையாக 2015 ஜனவரி 09ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரையும், நான்காவது தடவையாக 2015 ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018 ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிவரையும், ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 21ஆம் திகதி வரையும் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார்.

இதன் பின்னர் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க அம்மாதம் 12ஆம் திகதி மீண்டும் ஆறாவது தடவையாக பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை வகித்துவரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.