இலங்கையில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் கோத்தா இராஜினாமா செய்த விடயம் நாம் எல்லோரும் அறிந்ததே! ஜனாதிபதி ஒருவர் இராஜினாமா செய்தால், அந்த இடத்திற்கு யார் வர வேண்டும் என இலங்கை அரசியலமைப்பு கூறுகிறதோ, அந்த அடிப்படையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார் என்பது எல்லோரும் அறிந்ததே.

இலங்கையில் உள்ள பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் டலஸை ஆதரித்தன. இந் நிலையிலேயே ரணில் வெற்றி வாகை சூடியிருந்தார். இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது. இவ் இரு கட்சிகளும் ஐ.ம.சக்தியின் பங்காளி கட்சிகள். இது ஒன்றும் இரகசியம் அல்ல. பகிரங்கமான ஒன்றே! தற்போதைய அவர்களுடைய முடிவுகள், தங்களது பிரதான கட்சியான ஐ.ம.சவை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் டீல் ஏதுள்ளது?

இவ் விரு முஸ்லிம் கட்சிகள் எப்போதும் ஐ.ம.சவை சார்ந்தே முடிவை எடுக்க வேண்டுமா என கேட்கலாம். இது மிக நியாயமான கேள்வி. அப்படி எடுக்க தேவையில்லை என்பதே பதிலாகும். முஸ்லிம் கட்சிகள் ஐ.ம.சவோடு பங்காளி கட்சியாக இருக்கும் நிலையில், இன்னுமொரு கட்சியை ஆதரிக்க வேண்டுமாக இருந்தால், முதலாவது அரசியல் ஸ்திரத் தன்மை இருக்க வேண்டும். அது அரசனுக்காக புரிசனை இழந்த பேதையின் அறிவற்ற தீர்மானமாகி விட கூடாது.

தற்போது ரணிலிடம் ஒரே ஒரு பா.உறுப்புரிமையே உள்ளது. இந் நிலையில் அவர் ஐனாதிபதி பதவியை அடைந்தாலும், இந்த ஆட்சியை தொடர அவருக்கு பா.உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். அதாவது தனது ஆட்சியை தொடர மொட்டுக்கு அடிமைச் சேவகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ரணிலுக்கு உள்ளது. கசப்பானாலும் இதுவே உண்மை. தற்போது நடக்க போவதும் மொட்டுவின் நிழல் ஆட்சியே! எதனை வேண்டாம் என்று மக்கள் அடித்து விரசினார்களோ, அது வேறு ஒரு வடிவில் எம்மை ஆழ வந்தால், அதனை நாம் ஏற்பது அறிவுடையாகுமா? சோர்டீஸின் வடிவம் வேறானாலும் சுவை தரும் கீமா ஒன்றாக இருப்பது போலவே இக் கதை அமைந்துள்ளது.

எப்போது ரணில் மொட்டுவை சவாலுக்குட்படுத்துவாரோ, அன்று ரணிலின் கொட்டத்தை மொட்டு அடக்கும், ரணில் அடங்கியேயாக வேண்டும். ரணிலும், மொட்டும் நீண்ட நாள் ஒற்றுமையாக பயணிப்பது சாத்தியமற்றது. இரு கட்சிகளின் ஒற்றுமை கொள்கை அடிப்படையிலானதல்ல, சுயநல அடிப்படையிலானது என்பது யாவரும் அறிந்ததே. 2015ம் ஆண்டு மைத்திரி – ரணில் இடையில் ஏற்பட்ட ஒற்றுமை சிறிது காலத்திலேயே விரிசலை அடைந்திருந்தமையை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சுயநல அடிப்படையிலான ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்காதென்பது உறுதியான உண்மை. இப்படியான ரணிலின் நிலையற்ற ஆட்சியை நம்பி முஸ்லிம் கட்சிகள் செல்வது பொருத்தமாகுமா?

தற்போது நாட்டில் மாபெரும் மக்கள் கிளர்ச்சி நடைபெற்று ஓய்ந்துள்ளது. இதன் போது பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடக்க கூடாதென்பதே அனைவரினதும் பிரார்த்தனை. அந்த கிளர்ச்சியாளர்களின் கோரிக்கை கோத்தாவோடு சேர்த்து, ரணிலும் வீடு செல்ல வேண்டும் என்பதே! இந்த கிளர்ச்சியின் கோரிக்கையை மறுத்து, ரணில் ஜனாதிபதியாகி இருப்பது கிளர்ச்சியை மேலும் தூண்டும் செயலாகும்.

இந்த கிளர்ச்சியாளர்கள் அனைத்து கட்சிகளையும் சந்தித்து, ரணிலை தோற்கடிக்குமாறு கோரினர். இந்த மக்கள் கோரிக்கையை அ.இ.ம.கா புறக்கணித்து செயற்படுவது ஆரோக்கியமானதாக அமையாது. முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரித்திருந்தால், மக்கள் கிளர்ச்சி இக் கட்சிகளை நோக்கியும் திரும்பியிருக்கும். முஸ்லிம் கட்சிகளை நோக்கி கிளர்ச்சியாளர்களின் பார்வைகள் திரும்பினால் முஸ்லிம்களே விலை கொடுக்க நேரிடும். கடந்த காலங்களில் இலங்கை மக்களின் தீர்மானத்திற்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் செயற்பட்டமை, கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கான பிரதான காரணம் என்பதை மறுத்தலாகாது.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் பெற்ற வாக்குகளை அவதானிக்கும் போது ஐ.ம.ச, 10 சுயாதீன கட்சிகளின் கூட்டை உட்பட பல கட்சிகளை சேர்ந்தவர்கள் ரணிலை இரகசியமாக ஆதரித்துள்ளதை அறிய முடிகிறது. அதனை ஏன் அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. அதுவே இந் நாட்டின் நிலை. நிலை இவ்வாறிருக்க, மொட்டின் முட்டுக்கள் முஸ்லிம் கட்சிகளை விமர்சிப்பது அவர்களது இழி அரசியல் போக்கையே எடுத்து காட்டுகிறது. ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கும் போது மொட்டை ஆதரித்த இந்த முட்டுக்கள் முஸ்லிம் சமூகத்தையா கவனத்தில் கொள்ளப் போகிறது? ஒரு குழுவினர் முஷர்ரப் மற்றும் அதாவுல்லாஹ் ஆகியோர் ஆதரித்த ரணில் வென்றதால், அவர்களை ஏதோ ஞானி போன்று வர்ணிப்பதை அவதானிக்க முடிகிறது. அவர்கள் ஆதரித்த ராஜபக்ஸ பரம்பரையை இலங்கை மக்களே அடித்து, துரத்தியிருந்தார்களே, அப்போது இந் ஞானம் வெளிப்படவில்லையா?

முஸ்லிம் கட்சிகள் ஐ.ம.சவின் பங்காளி கட்சியாகவே டலஸை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்திருந்தது. நேரடியாக ஆதரிக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. டலஸின் அணியில் இலங்கையின் முக்கிய இனவாதிகள் இருந்தமை மறுக்க முடியாது. அந்த இனவாதிகள் அனைவரும் ஏற்கும் பொதுவான வேட்பாளராக டலஸை கருதியதாலேயே அவரை முன் மொழிந்திருந்தனர். இங்கு அனைவருக்கும் பொதுவானவர் என்ற கருத்து சிந்தனைக்குரியது. குறித்த நபரை சிறுபான்மையினரும் ஏற்க வேண்டும் என்பதே அதன் பொருள். அல்லாது போனால், இனவாதிகளில் ஒருவர் போட்டியிட்டிருப்பாரே! பொதுவானவர் என்ற அடிப்படையில் அல்லாமல் டலஸை குறித்த இனவாதிகள் ஆதரிக்க கூட அவர்களுக்கு டலஸோடு எந்த நேரடி சம்பந்தமுமில்லை. இந்த இனவாத கேள்வியை மொட்டோடு குடும்பம் நடத்திய முஸ்லிம் அரசியல் வாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் கேட்பதே வேடிக்கையானது. இந்த இனவாதிகள் மொட்டணியில் தானே இவ்வளவு நாளும் இருந்தார்கள். அப்போது உங்களுக்கு பிரச்சினையில்லையா? பா.உறுப்பினர் முஷர்ரப் உட்பட பலர் இனவாதியான கம்மன்பிலவை காக்க நேரடியாகவே வாக்களித்தவர்.

டலஸ் ஒரு இனவாதியல்ல என்பதே எனது பார்வை. அவர் சிறுபான்மையினத்தவரை வெளிப்படுத்தும் நிறங்கள் அகற்றப்பட்ட தேசிய கொடியை வைத்திருந்த செயலை வைத்து மாத்திரமே, அவரை எம்மவர்கள் இனவாதியாக குறிப்பிடுகின்றனர். அன்று அவரோடு கொடியேந்திருந்த பலர் அச் செயலை நியாயப்படுத்த முயற்சிக்கையில், அவர், தனது அக் குறித்த செயல் பிழையென ஒப்புக்கொண்டு, தன்னை அறியாமல் அக் கொடியை ஏந்தினேன் என கூறி, அந் நேரத்திலேயே சிறுபான்மை மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தார். பிழையை செய்துவிட்டு மன்னிப்பு கோரினால் மன்னிக்க முடியுமா என கேட்கலாம். இவரின் இந்த செயலால் நாம் உடனடியாக பாதிக்கப்படவில்லை. அவர் குறித்த விடயத்தை பிழை என ஏற்றுக்கொண்டதால், அதனை சரி என கூறுவோருக்கு அது செருப்படியாக அமைந்திருந்தது. அவர் மன்னிப்பு கேட்டது எமக்கு சாதகமானதாக அமைந்திருந்தது என்பதே யதார்த்தம். இன்னும் குறித்த கொடி விவகரம் முற்றுப் பெறவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பா.உ ஹரீஸ் டலஸை கல்முனைக்கு அழைத்து வந்து முத்திரை வெளியிட்டிருந்தார். இது போன்று அவரை முஸ்லிம் சமூகம் கௌரவித்த பல சம்பவங்களை கோடிட முடியும். அப்போது இனவாதியாக தெரியாதவர், இப்போது இனவாதியாக தெரிவது ஏன்? எல்லாம் மொட்டுக்கு கூஜா தூக்கும் இனவாதிமுளின் கூப்பாடு.

யார், என்ன சொன்னாலும், பாராளுமன்றத்தில் நடைபெற்றிருந்த 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கான தெரிவின் போது முஸ்லிம் கட்சிகள் முறையான விதத்திலேயே செயற்பட்டிருந்தன என்பதை ஆழமாக சிந்திப்போரால் ஏற்க முடியும். இன்னும் காலமுள்ளது.. மாற்றங்கள் வரலாம்…முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளும் மாறலாம்.. சந்தர்ப்பத்திற்கேற்ற அறிவு மிக அவசியமானது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.