இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (16) சியம்பலாண்டுவ பிரதேச செயலக பிரிவில் ரத்துமட, வீரகந்தவல ஆகிய பிரதேசங்களுக்கு அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கைகளை நேரில் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மொனராகலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்தும் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

விவாதம் செய்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.வீதிக்கு வந்து இரத்தம் சிந்தப் போவதாக சிலர் கூறியதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்த அவர், இரத்தம் சிந்துவதற்கு முன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மாத்திரமே அரசியல் பேசப்பட வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்

இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர்களான ஷசேந்திர ராஜபக்ஷ, ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கயாஷான் நவநந்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன, முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்து குமாரசிறி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மற்றும் பிரதேச அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.