137 ஆண்டுகள் காங்கிரஸ் வரலாற்றில் நாளை (ஒக்ரோபர் 17) 6ஆவது முறையாகத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது கட்சியின் தலைவர் யார் என்பதை தேர்தல் போட்டி முடிவு செய்வது இது ஆறாவது முறையாகும்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காந்தி குடும்பத்தைச் சாராதவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவர் பதவியை வகிக்கவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் என 9,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

மாநிலம் மாநிலமாகச் சென்று தேர்தலில் போட்டியிடும் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இருவரும் ஆதரவு கேட்டனர்.

கார்கே காங்கிரஸ் தலைவர்களின் விருப்பமான வேட்பளராகவும், சசி தரூர் காங்கிரஸில் மாற்றத்திற்கான வேட்பாளராகவும் கருதப்படுகின்றனர்.

அதேசமயத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்குக் காந்தி குடும்பத்தினர் விரும்புகின்றனர், அதிகாரப்பூர்வமான வேட்பாளர்கள் என யாரும் இல்லை என்று பிரச்சாரங்களின் போது சசி தரூர் கூறினார்.

தேர்தல் குறித்து பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “137 ஆண்டுக் கால வரலாற்றில் காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நடைபெறும் 6ஆவது தேர்தல் இதுவாகும்.

ஊடகங்கள் 1939, 1950, 1997 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைப் பற்றி முன்னிலைப் படுத்திப் பேசுகின்றன. உண்மையில், 1977 இல் காசு பிரமானந்த ரெட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் தேர்தல் நடந்தது.

சுபாஷ் சந்திர போஸ் vs பட்டாபி சீதாராமையா

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரது செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்தி. ஆனால் சுபாஷ் சந்திர போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

சீதாராமையாவின் தோல்வி, தனக்குப் பெரிய இழப்பு என்று காந்தி தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

அவரைச் சமாதானப்படுத்த சுபாஷ் சந்திர போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அதே ஆண்டு ராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட்டாபி சீதாராமையா

புருஷோத்தம் தாஸ் டாண்டன் vs ஆச்சார்யா கிருபளானி

1950 ஆம் ஆண்டில், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸின் முதல் தேர்தல் கட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்றது. அப்போது புருஷோத்தம் தாஸ் டாண்டன் மற்றும் ஆச்சார்யா கிருபாளனி ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் சர்தார் வல்லபாய் படேலின் விசுவாசியாகக் கருதப்பட்டார் டாண்டன். கிருபாளனிக்கு நேருவின் ஆதரவு இருந்தது. அப்போது நடந்த இந்த தேர்தல் நேருவுக்கும் – படேலுக்கும் இடையிலான பலப்பரீட்சை என்றே பார்க்கப்பட்டது.

ஆனால் 1952ல் கட்சியின் அமைப்பு மற்றும் செயற்குழு உள்ளிட்டவற்றில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் டாண்டன்.

மும்முனை போட்டி

1977 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சித் தலைவர் பதவியிலிருந்து தேவ் காந்த் பரூவா ராஜினாமா செய்தார்.
அப்போது நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கான கட்சித் தேர்தலில் சித்தார்த்த சங்கர் ரே மற்றும் கரண் சிங் ஆகியோரை தோற்கடித்தார் காசு பிரமானந்த ரெட்டி.

20 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்

இதையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1997ல் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், சரத் பவார் , ராஜேஷ் பைலட், சீதாராம் கேஸ்ரி ஆகியோர் போட்டியிட்டனர்.

மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர, அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவினரும் சீதாராம் கேஸ்ரியை ஆதரித்தனர். அப்போது பதிவான மொத்த வாக்குகளில் 6,224 வாக்குகளைப் பெற்று சீதாராம் கேஸ்ரி வெற்றி பெற்றார். பவார் 882 வாக்குகளும், பைலட் 354 வாக்குகளும் பெற்றனர்.

சோனியா காந்தி vs ஜிதேந்திர பிரசாத்

இறுதியாகக் கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜிதேந்திர பிரசாத் 94 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

சோனியா காந்தி 90 சதவிகிதம் அதாவது 7,400 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார்.

தற்போது 21 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

சசி தரூருக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. நாளை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.