பிரிவினைவாத தமிழ்த் தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வருகையாகவே இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகை அமைந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் பாரியளவு விமர்சனங்களை பெற்றுக்கொண்ட நபரான எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசராக எதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்?

சர்வதேச காலநிலை தொடர்பில் பணியாற்றுவது அவரது பணியாக அமையாது. அவருக்கு நன்கு பரீட்சயமான தமிழ் பிரிவினைவாத தரப்பினருடன் தொடர்பை ஏற்படுத்துவதே அவரது பிரதான இலக்காக இருக்கும்.

தற்போதைய நிலையில், இந்தியா இலங்கைக்கு தொடர்ச்சியாக நிவாரணங்களை வழங்க முடியாது என்று கூறியுள்ளது.

சீனாவிடமிருந்தும் உதவிகள் தற்போதைக்கு கிடைக்கப்பெறுவதில்லை.

தற்போது உதவி வரும் ஜப்பானது கடன் மறுசீரமைப்புக்கு மட்டுமே இணக்கம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தில் மூழ்கியுள்ள ரஷ்யாவும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள ஐரோப்பியாவும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வருவதற்கு தயாரில்லை.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது பிரிவினைவாத தமிழ்த் தரப்பினரால் மட்டுமே இலங்கைக்கு உதவ முடியும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளது.