செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலிக்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் பாதுகாப்பளித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரான பெண்ணுக்கு எந்த தடையுமின்றி மோசடிகளை முன்னெடுத்துச் செல்ல அது பெரும் உதவியாக அமைந்துள்ளதாக தெரிய வந்துள்ள நிலையில், இரு உயர் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில் திலினி பிரியமாலியை கோட்டை நீதிவானின் அனுமதிக்கு அமைய, சிஐடி. சிறப்புக் குழு ஸ்தல விசாரணைக்காக விளக்கமறியலுக்கு வெளியே அழைத்து சென்றுள்ளது. சிறைக் காவலர்களின் பூரண பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத்து செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

கைதும் மோசடிகளின் வெளிப்படுத்தலும்:

சிஐடிக்கு இந்த மோசடி தொடர்பில் முதல் முறைப்பாட்டை முன் வைத்தவர் அப்துல் சத்தார் எனும் வர்த்தகராவார். அவரிடம் திலினி செய்த மோசடிகள் தொடர்பில், அவர் இவ்வாறு முறையிட்டிருந்தார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் வீட்டில் வைத்து தானக்கு அறிமுகமான பிறிதொரு பெண் ( பிறிதொரு நிறுவனத்துடன் தொடர்புபட்டவர்… அவரையும் சிஐடி விசாரணை வலயத்தில் வைத்துள்ளது) வழங்கிய ஆலோசனைக்கு அமைய திலினியின் நிறுவனத்தில் தான் முதலீடு செய்ததாக அப்துல் சத்தார் முறையிட்டிருந்தார். அதன் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மேலும் சில முறைப்பாடுகளும் சிஐடிக்கு பதிவகியுள்ளன.

அதனடிப்படையில் கடந்த 5 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று திலினி பிரியமாலியைக் கைது செய்தது. அதன் பின்னரான விசாரணைகள் சிஐடியினருக்கே அதிர்ச்சியளித்தன. இதுவரை சுமார் 11 முறைப்பாடுகள் சிஐடியினரின் விசாரணைக்கு உட்பட்டுள்ள நிலையில், அவற்றூடாக மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 500 கோடி ரூபாவை நெருங்கியுள்ளது. எனினும் இது 1,000 கோடி ரூபாவரை செல்லும் என அனுமானிப்பதாகவும் சிஐடியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சிஐடியினர் திலினி பிரியமாலியின் நிறுவனத்தின் ஊழியர்களையும் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது திலினி பிரியமாலியின் மோசடிகளுக்கு எவரேனும் அகப்பட்டிருப்பின், அவர்கள் தங்களது முறைப்பாடுகளை அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் முன்வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

யார் இந்த திலினி?

திலினி பிரியமாலி என்பவர், உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மேற்கு கோபுரத்தில் திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் என கூறப்படுகிறது. குறித்த நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். ( நிறுவனத்தின் நடவடிக்கைகள் மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊடக செய்திகளை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மோசடி முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மத்திய வங்கி கூறுகிறது)

பொலிஸ் தகவல்கல் பிரகாரம், 8 ஆம் தரம் வரை மட்டுமே கல்வி கற்றுள்ள திலினி, சிறந்த பொது மக்கள் தொடர்பாடலை கொண்டிருந்துள்ளார். ஒரு காலம், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்குக்கு சென்றுள்ளார்

திலினி, 3 பிள்ளைகளின் தயாவார். அவரது மூத்த புதல்வர் 20 வயதானவர். அவரும் திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்திலேயே கடமைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில், திலினி பிரியமாலி, கடந்த ஒன்றரை வருடங்களாக, நட்சத்திர ஹோட்டல்களின் கீழ் உள்ள சிறப்பு தங்குமிடங்களில் தங்கியிருந்தவாறு மோசடிகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திலினி பிரியமாலிக்கு 3 திருமணங்கள். எனினும் பிள்ளைகள் மூவரும் முதல் திருமணத்தின் ஊடே பிறந்தவர்களாவர். ஏனைய இரு திருமணங்களின் செல்லுபடிதன்மை தொடர்பிலும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ, திலினி பிரியமாலி, செல்வந்த வர்த்தகர்களை அனுகி, அவர்களிடம் இருக்கும் பணத்தை தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய தூண்டி அவற்றை பெற்றுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக தொடர்மாடி வீட்டுத் திட்டங்கள், வெளிநாட்டிலிருந்து எரிபொருள் இறக்குமதி போன்ற திட்டங்களை காட்டி, அவற்றின் ஊடே பெரும் இலாபத்தை வழங்க முடியும் என்ற உறுதிப்பாட்டை அளித்து முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு, உரியவாறு அதனை வழங்காமையால், அவரது மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பணம் வழங்கியோரை அச்சுறுத்த நடிகைகளை பயன்படுத்திய திலினி:

திலினி பிரியமாலி, இலங்கையின் கலைஞர்கள் பலருடன் மிக நெருக்கமான உறவை கொண்டவர். தமது நிறுவனத்தில் முதலீடு செய்யும் சில வர்த்தகர்களின் பலவீனங்களை நன்கு அறிந்து, அவர்களுடன் நடிகைகள் சிலரை தொலைபேசியில் உரையாட செய்து, நெருங்கிப் பழகச் செய்து அவற்றை ஓடியோ, வீடியோவாக பதிவு செய்து அதனை மையப்படுத்தி அச்சுறுத்தியுள்ளதாகவும் , அதனூடாக முதலீட்டு பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் சிஐடியின் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்த 10 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சின்னத்திரை நடிகை ஒருவர் தொடர்பிலும் மற்றொரு நடிகை தொடர்பிலும் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கணினியில் உள்ள தகவல்கள்:

திலினி பிரியமாலி மோசடி செய்தோர் அல்லது கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்தோர் தொடர்பிலான அனைத்து விபரங்களும் அவரது கையடக்கத் தொலைபேசி ஒன்றிலும், கணினி ஒன்றிலும் இருப்பதாக நம்பும் சிஐடியினர். அவற்றை கைப்பற்றி சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆய்வு செய்து அறிக்கை பெற நடவடிக்கைஎ எடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணைங்கவின் கட்டுப்பாட்டில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகரவின் மேற்பார்வையில் சிறப்பு குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

மாணிகக் கல் வர்த்தகரிடம் பணம் பெற்று மோசடி செய்த சம்பவம்:

சிஐடியினருக்கு இறுதியாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடானது கொழும்பு 7, கறுவாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த வர்த்தகரிடம், சந்தேக நபரான திலினி பிரியமாலி 75 கோடி ரூபாவை மோசடி செய்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந்த வர்த்தகரின் முறைப்பாட்டில், பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மையப்படுத்தி விசேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும், விசாரணைகளுக்கு பொறுப்பான உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

75 கோடியை இழந்த வர்த்தகரின் முறைப்பாட்டில் பல முக்கிய விடயங்கள்:

உள்ளன. அவரை பிரபல நடிகைகளை கொண்டு அச்சுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.’ என குறித்த உயரதிகாரி கூறினார். இதனைவிட இந்த மோசடியில் மேலும் பல சுவாரஷ்ய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

கலாநிதி பட்டம் ஒன்றினையும் உடைய குறித்த வர்த்தகரிடம் 75 கோடி ரூபாவையும் பெற்றுக்கொள்ள, திலினி பிரியமாலி ஒரு பாம்பை பயன்படுத்தியுள்ளமை குறித்த தகவல்களே அந்த சுவாரஷ்ய தகவலாகும்.

மலேஷியாவில் கூட வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும், ஏற்றுமதி இறக்குமதித் துறையிலும் பல வியாபாரங்களை கையாலும் இந்த வர்த்தகர் மற்றொரு வர்த்தகர் ஊடாகவே திலினி பிரியமாலிக்கு அறிமுகமாகியுள்ளார்.

இந்த வர்த்தகர், சில பழைமையான அல்லது மூட நம்பிக்கைகளை பெரிதும் நம்புபவர் என்பதை திலினி சில நாட்களில் அறிந்து கொண்டுள்ளார்.

அதன் பிரகாரம், ஒரு நாள் தனது பாதுகாப்பு வீரர்களுடன், குறித்த வர்த்தகரின் வீட்டுக்குச் சென்றுள்ள திலினி, அங்கு தனது பைக்குள் இருந்து ஒரு பாம்பை எடுத்து அருகே வைத்துள்ளார்.

இதனால் வர்த்தகர் அதிர்ச்சியடைந்தபோது, குறித்த வர்த்தகரின் மரணித்த தந்தையே, பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளதாகவும், வீட்டில் பெரும் தொகை பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அது வீட்டுக்கு பாதிப்பானது என தெரிவித்துள்ளார்.

அதனை எங்காவது முதலீடு செய்ய ஆலோசனை வழகியுள்ள அவர், தனது நிறுவனத்தில் அதனைச் முதலீடு செய்யுமாறும், அதற்கு பகரமாக தங்கக் கம்பிகளை தான் பிணையமாக வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாம்பை கண்டு பயந்துள்ள வர்த்தகர், வரி உள்ளிட்ட காரணங்களுக்காக வீட்டில் பைகளில் மறைத்து வைத்திருந்த 75 கோடி ரூபாவை திலினியிடம் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்காக அவருக்கு தங்க கம்பிகள் சில வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவை தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை கம்பிகள் என்பது பின்னரேயே அந்த வர்த்தகருக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து கேள்வி கேட்க முற்பட்டபோது நடிகையை விட்டு அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

திலினியை பாதுகாத்த பொலிஸ் உயரதிகாரிகள்:

இந்தச் சம்பவத்தின்போது, தங்கமுலாம் பூசப்பட்ட கம்பிகளை எடுத்துச் சென்ற வாகனத்துக்கு, திலினிக்கு நெருக்கமான, அல்லது திலினியை பாதுகாத்த பொலிஸ் உயரதிகாரி ஒருவர் பாதுகாப்பளித்ததாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளது.

இதனைவிட, ஒரு தடவை திலினியால் மோசடி செய்யப்பட்ட ஒருவர், உலக வர்த்தக மைய கட்டிட அலுவகத்துக்குச் சென்று அது தொடர்பில் கேள்ள்வி கேட்டபோது, மற்றொரு உயர் பொலிஸ் அதிகாரி, கேள்வி கேட்ட நபரை பொலிஸ் நிலையம் வரவழைத்து, திலினி சமூகத்தில் அந்தஸ்துள்ள பெண் எனவும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இது குறித்து சிஐடியில் கொடுத்த முறைப்பாட்டில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் கூறியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே குறித்த பொலிஸ் உயரதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பின்னணியில் இருப்பவர் யார்?

இந்நிலையில், திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடியினர் தீர்மானித்துள்ளனர். அதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையிலான சிஐடி விசாரணைகள் பிரகாரம், திலினி பிரியமாலி குறித்த மோசடி நடவடிக்கைகளை தனியாக முன்னெடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சகாவாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் இம்மோசடிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிஐடி தகவல்கள் தெரிவித்தன. திலினி பிரியமாலியின் கணவராகவும் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சந்தர்ப்பங்களும் உள்ளதாக கூறும் சிஐடியினர், அவரை பல தடவைகள் விசாரித்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

இதனைவிட சில அரசியல் தொடர்புகள் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதாக பரவலாக நம்பப்படும் நிலையில், அவையனைத்தையும் வெளிப்படுத்த பரந்த விசாரணைகள் நடப்பதாக சிஐடியினர் தெரிவிக்கின்றனர்.

அடுத்துவரும் நாட்களில் விசாரணை தகவல்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்காக, திலினியின் கையடக்கத் தொலைபேசி, கணினி, மற்றும் ஏனைய ஆவணங்களை சிஐடியின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு ஊடாக பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய சந்தேக நபரான திலினி பிரியமாலி நாளை 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் அவர் குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எம்.எப்.எம்.பஸீர்