இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் அதற்கு அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்துள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத், அரசாங்கத்தின் உயர்மட்டப்பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பொருளாதாரத்துறைசார் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

அந்தவகையில் நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ரொபேர்ட் கப்ரொத், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடினார்.

அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோருடனான சந்திப்பும் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இதன்போது குறிப்பாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்தும் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இணக்கப்பாட்டை எட்டுவது அவசியமென்றபோதிலும், அண்மையில் எட்டப்பட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படாமை தொடர்பில் அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலரிடம் கரிசனையை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த ரொபேர்ட் கப்ரொத், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைத் தொடர்ந்து முன்கொண்டுசெல்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதுகுறித்துக் கருத்துவெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், பொறுப்புக்கூறலை மேம்படுத்தக்கூடியதும் அனைத்து இலங்கையர்களினதும் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியதுமான பொருளாதார மறுசீரமைப்புக்களே பொருளாதார மீட்சிக்கான திறவுகோலாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.