60, 70களில் ஹீரோக்களுக்காக தான் கதைகள் எழுதப்படும். அவர்களை வைத்து தான் மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்தார்கள். இவ்வாறு படங்கள் வெளியான நிலையில் ஹீரோ ஆதிக்கத்தை உடைத்து ஒரு தமிழ் படம் வெளியானது. தற்போது வரை அந்த படம் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என மாபெரும் ஹீரோக்களை உருவாக்கியவர் இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர். இவர் ஹீரோக்களுக்கு வாழ்வு தந்தாலும் தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துமான படங்களையும் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் 1974 இல் வெளியாகி 150 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம் அவள் ஒரு தொடர்கதை. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் இப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.

தந்தை குடும்பத்தை நிர்கதியாக விட்டுப் போக குடும்ப பாரம் மொத்தமாக கவிதா மேல் விழுகிறது. இருளை நீக்க தன்னை அழித்துக் கொள்ளும் மெழுகுவத்தி போல் கவிதா தனது குடும்பத்திற்காக உழைக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்திற்காகவே வாழ்கிறார்.

நம் மனதில் அழிக்க முடியாத தாக்கத்தை உண்டாக்கிய படம் தான் அவள் ஒரு தொடர்கதை. கவிதா கதாபாத்திரத்திற்கு மிகவும் சரியாக பொருந்தி இருந்தார் சுஜாதா. மேலும் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இவர்களைத் தவிர ஸ்ரீப்ரியா, பட்டாபட்டி ஜெயலட்சுமி, விஜயகுமார், ஜெய்கணேஷ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாலச்சந்தரின் பல அற்புதமான படங்களில் அவள் ஒரு தொடர்கதை படமும் ஒரு முத்தாக அமைந்தது.