தளம்
பிரதான செய்திகள்

மலையக மக்கள் தொடர்பில் குழு அமைத்தார் ஜனாதிபதி

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளதாகவும், வேறு சிலர் அங்கு தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இணைந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

23 வருடங்களுக்கு முன்னர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோர்  இந்த மருந்துப் பொருட்களை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குறித்த மருந்துப் பொருட்களை கையளித்தார்.

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சுக்குக் கீழ் கொண்டுவரும் அதேவேளை, தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தியை உறுதி செய்வதற்கு தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மக்களைப் போன்று மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் மக்களும் தமது சொந்த வீட்டில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் மற்றும் அவற்றில் வீடுகளை அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசாங்கத்தின் ஆதரவு வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வியை முடித்த பின்னர் இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாகவும், அதன் காரணமாக ஆபத்தில் உள்ள பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பெருந்தோட்ட இளைஞர்கள் மற்றும் நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

மலையக மக்களை வறுமையில் இருந்து விடுவித்து அவர்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்காக, அங்கு வாழும் மக்களின் எதிர்காலம் மற்றும் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜே.ஆர் ஜயவர்தன ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் பிரகாரம், மலையகத்தில் வாழும் தமிழ் வம்சாவளி மக்களுக்கு, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்கள் பெறும் சலுகைகளை வழங்க அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த வேலைத் திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு மலையகத் தமிழ்த் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மறைந்த தொண்டமான் , மலையக மக்களுக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பின்னர், தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனைவருக்கும் அகிம்சை வழியில் குடியுரிமை வழங்கியதன் காரணமாக 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்ததாக அறிவித்தார். ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய ஆனாலும் இலங்கையில் தங்கியிருக்க தீர்மானித்த பிரஜைகளும் குடியுரிமை பெற்றதாக ஜனாதிபதி இங் கு நினைவு கூர்ந்தார்.

Related posts

அஜித் நிவாட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா

Fourudeen Ibransa
3 years ago

ரணிலை பதவியில் இருந்து விரட்ட தீவிர போராட்டம் நடத்த ஏற்பாடு!

Fourudeen Ibransa
2 years ago

கோட்டாபயவை போன்று ரணிலும் விரைவில் ஓடுவார்.!

Fourudeen Ibransa
1 year ago