இந்திய மாநிலம் குஜராத்தில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலமானது, புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத் புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், இன்று அது அறுந்து விழுந்துள்ளது. பாலம் அறுந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.

இதில், தற்போது 60 பேர்கள் வரையில் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பில் தகவல் அறிந்ததும் மாகாண நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை என அனைத்து துறையினரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் பூபேந்திர படேல், மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் மிகவும் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து தேவையான உத்தரவுகளை வழங்கி வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர்கள் வரையில் மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தின் முழு பொறுப்பையும் மாகாண நிர்வாகம் ஏற்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.