தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தற்கொலை செய்த ராம்குமாரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் மரணமடைந்த ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ராம்குமார் மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறை கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.