யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நேற்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், காணி உரிமையாளர்கள், சிவில் அமைப்பு ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் தெல்லிப்பளை சந்தியில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்ததோடு, கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான அனைத்து தனியார் காணிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரும் இந்த மகஜரில், அந்த இரண்டு மாகாணங்களிலும் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் எவ்வாறான நிரந்தர அரசியல் தீர்வை விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த மகஜரில் கோரப்பட்டுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

யுத்த காலத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் மாத்திரம் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு சொந்தமான தனியார் காணி 6,384 ஏக்கர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் காணி உரிமையாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களினால் 3,384 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை விடுவிக்கப்படாத எஞ்சிய 3,000 ஏக்கர் காணியில் 1,600 ஏக்கர் காணியை இராணுவ முகாம் விஸ்தரிப்புக்காக ஒதுக்குமாறு கடந்த செப்டெம்பர் மாதம் காணி அமைச்சர் வலி வடக்கு பிதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணி உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாகாண செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.