நடிகர் விஜய் தனது தந்தை மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மூலமாக திரையுலகில் கால் பதித்தவர். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பல திரைப்படங்களில் விஜய் நடித்து வந்த நிலையில், இன்று தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று தொடர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் நடிகர் அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து முதலில் மாடலிங்கில் பணியாற்றி சில விளம்பரங்களிலும் நடித்து பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்து இன்று தல என்ற அடைமொழியுடன் தனக்கான தனி சாம்பிராஜ்யத்தையே கட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளனர். அதில் ஒரு திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே. இத்திரைப்படத்தில் அஜித் மற்றும் விஜய்யின் காம்பினேஷன் ரசிகர்களுக்கு பிடித்த நிலையில், நேருக்கு நேர் திரைப்படத்தில் இருவரும் இணைந்து அதிக வாய்ப்புகள் இருந்தது.

அந்த சமயத்தில் நடிகர் அஜித்திற்கு அவரது கதாபாத்திரம் பிடிக்கவில்லையாம், அதற்கு பதிலாக விஜய்யின் கதாபாத்திரம் தனக்கு கொடுத்தால் இத்திரைப்படத்தில் நடிப்பேன் இல்லையென்றால் நான் நடிக்க மாட்டேன் என இயக்குனர் வசந்திடம் தெரிவித்தாராம்.

அதன் பின்புதான் இத்திரைப்படத்திற்கு சூர்யா நடிக்க வந்தார். இதனிடையே இந்த சமயத்தில் தான் விஜய்க்கும், அஜித்துக்கும் சில மனக்கசப்புகள் உருவானது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டு விஜய்யின் திருமலை திரைப்படமும் அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் ஒருநாள் முன்பின் தேதியில் ரிலீசானது. இதுதான் முதல் அஜித், விஜய்யின் போர் என்று கூட சொல்லலாம்.

இத்திரைப்படத்தின் போது தான் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே அதிகமான மோதல் ஏற்பட்டது எனலாம். இவர்களை தொடர்ந்து இவர்களது ரசிகர்களும் தல, தளபதி மோதலை இன்று வரை சமூக வலைத்தளங்களில் இருந்து அவர்களது வாழ்வியல் வரை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.