யாழ்ப்பாணத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்துகளை பொலிஸ் மற்றும் இராணுவ சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை கொடுத்துள்ளார்.

A9 வீதியில் பயணிக்கும் தனியார் பேருந்துகள் சில வழி அனுமதிப் பத்திரமின்றி பயனிப்பதாகவும் பயணிகளை ஏற்றுவதில் ஏற்படும் போட்டித் தன்மை காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக ஆளுநருக்கு முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குறித்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, வழி அனுமதிப்பத்திரத்தில் A9 இல் இராணுவம் மற்றும் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றில் கட்டாயம் நிறுத்தப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டதை உறுதிப்படுத்தி இறுதிச் சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

கானகராயன்குளம் அல்லது வசதியான பகுதியில் 10 நிமிடங்களுக்கு அனைத்து தூர பேருந்துகளையும் கட்டாயமாக நிறுத்த வேண்டும்.

குறித்த, பேருந்து நிறுத்தும் இடங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் கழிப்பாறைவசதிகள் மற்றும் உணவு வசதிகளுக்கு ஏற்றவாறு தயார்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் வருமானங்களை பெற்றுக் கொள்ள முடியும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.