தளம்
பிரதான செய்திகள்

ஓமனில் விற்கப்படும் இலங்கை பெண்கள்…!

இலங்கையிலிருந்து துபாய்க்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடியோ மூலம் இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் ஓமானிலிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது.

அதில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய பெண்கள் இலங்கை ஜனாதிபதியிடம் உருக்கமாக வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையில், இலங்கையிலுள்ள ஏஜென்ஸியும் ஓமான் நாட்டிலுள்ள ஏஜென்ஸியும் எங்களை ஏமாற்றி, சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஓமானில் விற்றுவிட்டார்கள்.

இப்போது அடிமைகளாக இங்கே அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஏஜென்ஸிகள் எங்கள் ஒவ்வொருவரிடமும் தலா 18 லட்சம் ரூபாவை வாங்கிக்கொண்டே எங்களை அடிமைகளாக விற்றிருக்கிறார்கள்.

கையில் கடவுச் சீட்டும் இல்லை. அதனையும் பறித்துக் கொண்டார்கள். அதனால் நாங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளோம்.., என்று கூறியுள்ளனர்.

மேலும், கைபேசிகள் அல்லது தொடர்பு கொள்ளக் கூடிய எதுவும் எங்களிடம் இல்லை. சம்பளம் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்பதால்தான் இங்கு வீட்டுப் பணிப்பெண்களாக வந்தோம்.

நாங்கள் அனைவரும் பெண்கள். இங்கே சுகாதார வசதிகளும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்லாது அவஸ்தைப்படுகின்றோம்.

நாங்கள் இங்கே வந்தது எமது வறுமையைப் போக்கவும் பொருளாதார நெருக்கடியிலுள்ள இலங்கை நாட்டுக்கு டொலர் வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குமாகும்.

ஆனால், பெரும் தியாகத்தின் மத்தியில் எங்களது தாயை, தந்தையை, கணவனை, பிள்ளைகளை, உறவுகளைப் பிரிந்து வந்து குடும்பத்துக்கும் நாட்டுக்கும் உதவிசெய்ய வந்த எங்களை இங்கே அடிமைகளாக விற்று எங்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக நாங்கள் அக்டோபர் 26-ஆம் திகதி ஆர்ப்பாட்டமும் செய்தோம் அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. இங்குள்ள இலங்கைத் தூதரகமோ, இந்ந நாட்டு அரசாங்கமோ, எவருமே கண்டு கொள்ளவில்லை.

நவம்பர் 1-ஆம் திகதி தொழில் நீதிமன்றத்திற்கும் சென்றோம். ஆனால், அங்கும் எமக்கு சார்பாக நீதி வழங்கப்படவில்லை. நீதிமன்றம் எங்கள் சார்பாக பெற்றுக்கொண்ட 18 இலட்சம் ரூபாய் பணத்தையும் கட்டிவிட்டு போகுமாறு கேட்கிறார்கள்.

உண்மையில் இலங்கையிலுள்ள பணிப்பெண்களை இங்கே அழைத்து வரும்பொழுது எங்களுக்கு ஒரு இலட்சம் அல்லது இரண்டு இலட்சத்தை மாத்திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாட்டிலுமுள்ள ஏஜென்ஸிகள் சுருட்டிக் கொள்கிறார்கள்.

இது ஒரு மோசடியும், மனிதக் கடத்தலும் அடிமை வியாபாரமுமாகும். எனவே மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணுரிமை அமைப்புக்கள் இந்த மோசடியை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், இனிமேல் சுற்றுலா வீசாவில் எந்த இலங்கைப் பெண்ணும் இந்த நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

உக்ரைன் எனும் நாட்டை ரவுடி நாடாக உருவாக்க எண்ணுகிறது அமெரிக்கா..!

Fourudeen Ibransa
2 years ago

நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதாயின், நால்வகை பாதுகாப்பை நாம் பிரேரிக்கின்றோம்

Fourudeen Ibransa
3 years ago

 சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் உள்ளது .!

Fourudeen Ibransa
2 years ago