“ மலையகத் தமிழர்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என ஜனாதிபதி எதிர்வரும் சுதந்திர தினத்தில் அறிவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க மலையகக் கட்சிகள் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்” – என்று மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆலோசகரான அருட்தந்தை மா. சத்திவேல் வலியுறுத்தினார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மலையக மக்கள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் இரு நூற்றாண்டு வரலாற்று வாழ்வை நிறைவு செய்வதுடன் புதிய நூற்றாண்டு வாழ்வையும் ஆரம்பிக்கின்றனர். இது தொடர்பில் பொது அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் தனித்தனியாக ஆங்காங்கு நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், மலையக மக்களை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் இரு நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு மலையக மக்களுக்கு எத்தகைய அரசியல் கௌரவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தனித் தனிக் கட்சிகளாகவோ அல்லது கூட்டாகவோ ஆயத்தமாக உள்ளன.

இந்தக் கட்சிகள் எத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார சமூக அடைவை நோக்கி அழைத்துச் செல்லவுள்ளன என்பது தொடர்பில் தமது கருத்துக்களை அவசரமாக வெளிப்படுத்த வேண்டும் என மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்கும் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

அண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயலகத் திறப்பு விழாவில் மலையகப் பிரதான கட்சிகளோடு பேரினவாதக் கட்சியினரும் கூட்டாக மேடையில் அமர்ந்திருந்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

இது வெறும் மேடை நாடகமாகவோ அல்லது தேர்தலுக்கான வியூகமாகவோ மட்டும் அமைந்துவிடக் கூடாது என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பு. மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது விடின் அது பெரும் அரசியல் துரோகமாகவே கொள்ளப்படும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறுவார்கள். ஆனால் மலையக மக்களுக்கு வலி மட்டுமே பிறக்கின்றது. இன்னும் இந்நாட்டில் மூன்றாம் தரப் பிரஜைகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் வாக்களிக்கும் இயந்திரங்களாக அன்றி நாட்டின் பிரஜைக்குரிய கௌரவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்தகைய அரசியல் அடைவை நோக்கிய அரசியல் கருத்தியலையும் அதற்கான பயண வழி வரைபடத்தையும் எதிர்வரும் ஆண்டு பிறப்பதற்கு முன்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வெளிபடுத்தினால் சிறப்பாக அமைவதோடு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். அத்தோடு இரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளும் அதனை மையப்படுத்தியதாக்கிட இலகுவாகவும் அமையும்.

மலையக மக்களுக்கு எதிர்வரும் ஆண்டு இரு நூற்றாண்டு வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆண்டாக இருப்பது போல் இலங்கைக்கு 75 ஆவது சுதந்திர ஆண்டாகவும் அமைகின்றது. மலையக மக்கள் நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, கட்டுமானம், பாதை அமைப்பு, அந்நியச் செலாவணியை ஈட்டித் தருதல், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பெரும் பங்காற்றி தமது அடையாளத்தையும் பதித்துள்ளதோடு உயிர்த் தியாகமும் செய்துள்ளனர்.

இதனைக் கௌரவிக்கும் முகமாக மலையகத் தமிழர்கள் இந்த நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என ஜனாதிபதி எதிர்வரும் சுதந்திர தினத்தில் அறிவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை மலையகக் கட்சிகள் கொடுக்கக் கூட்டு முயற்சி எடுத்தல் வேண்டும். பூனைக்கு மணி கட்டுவது யார்?

மலையக மக்கள் சமூக மயமாக்கல் தொடர்பாக ஒரு குழு அமைக்க போவதாக கடந்த வாரத்தில் ஜனாதிபதி அறிவித்திருந்தார். இது வெறும் வாய்க்குழுவாக அமைந்துவிடக் கூடாது. ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்ற நிறைவேற்று ஆணைக் குழுவாக அமைதல் வேண்டும். இக்குழு மலையக மக்கள் அரசியல் அபிலாஷைகளைத் தெளிவாக அறிந்துகொள்வதற்குக் கடந்த காலங்களில் மலையக அமைப்புகள் அரசியல் யாப்பு சீர்திருத்தத்துக்காக முன்வைத்த ஆலோசனைகளை அலசி ஆராய்ந்து ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அத்தோடு அவசரமாக புதிய ஆலோசனை அறியும் செயற்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும். இதன் ஓரங்கமாக மலையகத் தமிழர்கள் இந்த நாட்டில் வாழும் தேசிய இனம் என சுதந்திர தினத்தில் அறிவித்தால் அது நாட்டின் அரசியலுக்கும் மலையக மக்களுக்கும் கௌரவமாக அமையும்.

இத்தகைய அரசியல் சமூகப் பின்னணியில் மலையகக் கட்சிகள், மலையக மக்களின் அரசியல் சார்ந்து அது தொடர்பான தெளிந்த கருத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் முன்வைத்தால் சிவில் சமூக அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் அதனை மையப்படுத்திய இரு நூற்றாண்டு நிகழ்வை மைப்படுத்தி மக்கள் சக்தியைப் பலப்படுத்தி முன்னோக்கி செல்ல முடியும். இல்லையேல் இரு நூற்றாண்டு நிகழ்வு விழாக்கள் வெறும் வானவேடிக்கயாகவே அமைந்து விடும்” – என்றுள்ளது.