முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பலமான அரசியல் பயணத்தைத் தொடர்வார். கட்சிக்கும் பலமிக்கதொரு தலைமைத்துவத்தை வழங்குவார். இவற்றுக்கு இரட்டை குடியுரிமை தடையாகக் காணப்பட்டால் அதனை நீக்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

2009 இல் மறை பொருளாதாரத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்றார். எனினும் அவர் 2014 ஆம் ஆண்டு உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இரண்டாவது நாடாக இலங்கையை முன்னேற்றினார்.

2015 இல் ராஜபக்ஷாக்கள் மோசடிக்காரர்கள் என போலியான பிரசாரங்களை முன்னெடுத்து , மக்களை பெருந்தவறிழைக்கச் செய்து விட்டனர்.

தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்ற இளைஞர்களைக் கொண்டு , பொருளாதார முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

இது பொறுத்தமற்ற செயற்பாடாகும். நாடு திரும்பியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பலமான அரசியல் பயணத்தைத் தொடர்வார். அவரை இலக்கு வைத்தே நல்லாட்சி அரசாங்கத்தில் இரட்டை குடியுரிமை விவகாரம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்டு அவரது பாராளுமன்ற பிரவேசம் தடுக்கப்பட்டாலும் , பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்து 2018 உள்ளுராட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியையும் பதிவு செய்தார்.

அது மாத்திரமின்றி பெறவே முடியாது எனக் கூறப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மிக இலகுவாக பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டார்.

தனது அரசியல் பயணத்திற்கு இரட்டை குடியுரிமை தடையாகவுள்ளதாக அவர் உணர்ந்தால் அதனை நீக்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுப்பார்.

எது எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுனவிற்கு பலமானதொரு தலைமைத்துவத்தை வழங்குவார். அதிகார ஆசை கொண்டவர்களே பொதுஜன பெரமுனவிடமிருந்து பிளவடைந்துள்ளனர். ஏனையோர் இன்றும் கட்சியுடனேயே உள்ளனர்.

பஷில் ராஜபக்ஷவிற்கு கட்சி ரீதியில் நாம் பாதுகாப்பினை வழங்குவோம். அந்த பாதுகாப்பினை பொலிஸார் வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நாம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கும் தயாராகவே உள்ளோம். தேர்தல் முடிவுகளின் போது மக்கள் ராஜபக்ஷாக்களை வெறுத்துள்ளனரா இல்லையா என்பது தெரியும் என்றார்.