ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய புலனாய்வு பிரிவான ‘றோ’ வின் தலைவரை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, ‘றோ’ தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘றோ’ இந்திய புலனாய்வு பிரிவின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அல்லது அரச அதிகாரியை சந்தித்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் எனக்குத் தெரியாது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றிருக்குமானால் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் தெரிவிக்க முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சகல விடயங்கள் தொடர்பிலும் நாட்டுக்கு எந்தவொரு விடயத்தையும் மறைக்காமல் , அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்துகின்றார் என்பது எமது நம்பிக்கையாகும் என்றார்.

இந்திய புலனாய்வு பிரிவான ‘றோ’ வின் தலைவர் கொழும்பிற்கு விஜயம் செய்ததாகவும் , அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததாகவும் பிரதான ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கேட்கப்பட்ட போது , அவ்வாறான சந்திப்புக்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் , எனினும் பஷில் ராஜபக்ஷவை சந்திப்பதற்கு எவருக்கும் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதியின் தரப்பிலிருந்தோ அல்லது அரசாங்க தரப்பிலிருந்தோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே அமைச்சரவை பேச்சாளரும் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.