இளவரசர் வில்லியமின் ஞானமாதா லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறி சர்ச்சைகளில் சிக்கி கொண்டதை தொடர்ந்து தனது அரச கடமைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக இருந்த 83 வயதான லேடி சூசன் ஹஸ்ஸி, லண்டனைச் சேர்ந்த சிஸ்டா ஸ்பேஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்கோசி ஃபுலானியிடம் இனவெறியுடன் பல கேள்விகளை கேட்டு சர்ச்சை வெளியானதை தொடர்ந்து தனது மன்னிப்பை சூசன் ஹஸ்ஸி கோரியுள்ளார்.

அத்துடன் புதன்கிழமையன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் வகித்த கெளவர பணியில் இருந்து ராஜினாமா செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று பிரித்தானியாவின் ராணி கன்சார்ட் கமிலா நடத்திய “பெண்களுக்கு எதிரான உலகளாவிய வன்முறை தொற்றுநோய்” குறித்த கூட்டத்தில் இந்த இனவெறி தாக்குதல் நடந்ததாக என்கோசி ஃபுலானி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில் உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா மற்றும் ஜோர்டான் ராணி ரானியா உட்பட சுமார் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி-யால் கூட்டத்தில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான தொண்டு நிறுவனத்தின் என்கோசி ஃபுலானி, பிறகு ட்விட்டரில் இருவருக்கும் இடையிலான பரிமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

அதில் நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள், ஆப்பிரிக்காவின் எந்த பகுதியை சேர்ந்தவர், மற்றும் உண்மையில் நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் சூசன் ஹஸ்ஸி கேட்டதால் முற்றிலும் திகைத்து போனேன் என்று ஃபுலானி தெரிவித்துள்ளார்.

ஃபுலானி மற்றும் சூசன் ஹஸ்ஸி இருவருக்குமான உரையாடலை நேரில் பார்த்த மாண்டு ரீட், லேடி ஹஸ்ஸி-யின் கேள்விகள் “தாக்குதல், இனவெறி மற்றும் விரும்பத்தகாதவை” என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் என்கோசி ஃபுலானி தான் இங்கிலாந்தில் பிறந்து வசித்து வருபவள் என்று ஏற்கனவே விளக்கி இருந்தும், மீண்டும் மீண்டும் சூசன் ஹஸ்ஸி நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள், ஆப்பிரிக்காவில் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று விசாரிக்கப்பட்ட பரிமாற்றம் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளவரசர் வில்லியமின் காட்மதரான லேடி சூசன் ஹஸ்ஸி-யின் சர்ச்சை குறித்து கென்சிங்டன் அரண்மனையில் உள்ள இளவரசர் வில்லியமின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்ட போது, “எங்கள் சமூகத்தில் இனவெறிக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை, அதனால் அந்த நபர் ஒதுங்கியிருப்பது சரியானது என்றும் தெரிவித்துள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக பார்க்கிறோம் மற்றும் அனைத்து விவரங்களையும் நிறுவ உடனடியாக விசாரணை செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.