பொதுவாக நடிகர்களுக்கு நூறாவது படம் என்றாலே ரொம்பவும் ஸ்பெஷல் தான். நிச்சயமாக அது நடிகர்கள் அனைவருக்கும் சரித்திர சாதனையாக தான் இருக்கும். அப்படிப்பட்ட நூறாவது திரைப்படத்தை வெற்றி படமாக கொண்டு வர வேண்டும் என்று ஹீரோக்கள் மெனக்கெடுவார்கள். அதேபோன்று தான் ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களுடைய நூறாவது படத்திற்காக கடின உழைப்பை போட்டனர்.

ஆனால் அந்த திரைப்படம் அவர்களுக்கு மரண அடியை கொடுத்தது. அதாவது எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த நூறாவது திரைப்படம் தான் ஸ்ரீ ராகவேந்திரா. கே பாலச்சந்தர் தயாரித்திருந்த அந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து லட்சுமி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரஜினி அப்படத்தில் ஆன்மீகவாதியாக முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரசிகர்களை கவரும் என்று நினைத்த அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அந்த வகையில் ரஜினியின் நூறாவது திரைப்படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அதேபோன்று கமல் நடிப்பில் வெளிவந்த நூறாவது திரைப்படம் தான் ராஜபார்வை. 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மாதவி நடித்திருந்தார்.

அத்துடன் கமல் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமும் இதுதான். ஹாசன் பிரதர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த கமல் தன்னுடைய நூறாவது திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்தார். ஆனால் இப்படம் கமலுக்கு மோசமான படமாக அமைந்துவிட்டது.

சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் திரைக்கதை எழுதி இருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது மட்டும் அல்லாமல் இந்த படத்தினால் கமலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். தயாரித்த முதல் படமே இப்படி ஒரு மரண அடியை கமலுக்கு கொடுத்தது.

இதிலிருந்து மீண்டு வரவே கமலுக்கு சில காலங்கள் ஆனதாம். அதன் பிறகு கமல் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் இன்று மாற்றியமைத்தார். பிறகு அவர் தயாரித்த விக்ரம், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் கமலுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.