மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை உருவாக்குவதற்கு பிரயத்தனம் செய்துவரும் நிலையில், தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது போன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசியலமைப்பின் ஊடாக நிரந்தரமான தீர்வு காணப்பட்டதன் பின்னரே ஆணைக்குழுவினை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் தமிழ் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். இந்த அழைப்பு தொடர்பில் ஏற்கனவே தமிழ்த் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் கூடிப் பேசிவிட்ட நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை களைவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷவுடன் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.

தொடர்ந்து, தென்னாபிரிக்காவின் துறை சார்ந்த நிபுணர்கள் குழுவொன்றுடன் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அதனையடுத்து, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும், குறித்த நிபுணர்கள் குழுவினரை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் சுமந்திரனும் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மலையக, முஸ்லிம் தரப்புக்களுடன் பேச்சு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான அழைப்பினை விடுத்துள்ளதோடு 12ஆம் திகதிக்குப் பின்னர் அப்பேச்சுக்களை ஆரம்பிப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மூன்று முக்கிய விடயங்களையும் முன்வைத்துள்ளனர்.

அவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று, பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கான காலம் இன்னமும் உறுதியாகவில்லை. இந்த நிலையில், அண்மைய நாட்களில் ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகளில் எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இருப்பினும், எமது பக்கத்திலிருந்து பேச்சுக்காக கிடைத்த சந்தர்ப்பத்தினை வீணடித்தவர்கள் என்ற பழியை சுமப்பதற்கு தயாரில்லாத நிலையில் ஆயத்தங்களை முன்னெடுக்கின்றோம்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இறுதியாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டு தயாரித்த இடைக்கால அறிக்கை வரையில் பல விடயங்கள் உள்ளன. ஆகவே, இதயசுத்தியுடன் அதற்கான பேச்சுக்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டால், ஓரிரு அமர்வுகளிலேயே இறுதித் தீர்வு வடிவத்தினை எட்டிவிடலாம். அது ஒருபுறம் இருக்கையில், நாம் எமது சகோதர இனங்களான மலைய மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் அச்செயற்பாடு இடம்பெறவுள்ளது.

சர்வகட்சிகளின் அறிக்கையில், சமூக சபைகள் மற்றும் அவற்றுக்கான அதிகாரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கல்வி, கலாசாரம், சமயம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளன.

ஆகவே, அதிகாரப்பகிர்வு என்ற விடயம் சம்பந்தமான பேச்சுக்கள் இடம்பெறுவதாக இருந்தால், மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக இணக்கப்பாட்டை எட்ட வேண்டியுள்ளது.

உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு பிரயத்தனம் செய்துவருகின்றது.

அவ்விதமானதொரு கலந்துரையாடலில் நானும் பங்கேற்றிருந்தேன். தென்னாபிரிக்காவின் நிபுணத்துவமானவர்கள் பிரசன்னமாகியிருந்தார்.

எவ்வாறாயினும், உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதானது அவசியமானதாக இருந்தாலும், அதற்கு முன்னதாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்ல தீர்வொன்றை மையப்படுத்தி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

அதன் பின்னரே, ஆணைக்குழுவினை ஸ்தாபிக்க வேண்டும். தென்னாபிரிக்காவிலும் அவ்வாறு தான் நடைபெற்றது. அங்கு முரண்பாடுகளின் பின்னர் இடைக்கால அரசியலமைப்பொன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே தேர்தல் நடத்தப்பட்டது.

ஆகவே, தென்னாபிரிக்காவின் அனுபவங்களை அரசாங்கம் முறையாக பெற்றுக்கொள்ளுமாக இருந்தால், குறித்த விடயம் அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தப்படும். ஏனென்றால், தென்னாபிரிக்க தரப்பினர் எம்முடன் பேசும்போது, எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே கடந்த காலம் பற்றிய உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

அந்த வகையில், தென்னாபிரிக்காவும் அரசாங்கத்துக்கு அவ்விதமான ஆலோசனையையே இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கும் என்றார்.