இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது சரியான தருணம் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மைய தேர்தல்களில் வெற்றி பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போனமைக்கு மன்னிப்பும் கோரியதுடன், பின்னடைவுகளை நிவர்த்தி செய்து, தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஆளுகை அல்லது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்றும் வலியுறுத்தினார். மேலும், மீண்டும் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் போனதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதியின் பணிகளை பாராட்டினார்.