வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் என்ற பெயரில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தம்பாட்டில் வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவைப் பணித்தார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.

அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணாக தனிநபர் ஒருவர் நியதி சட்டங் களை ஆக்கி அறிவிக்கும் விதத்தில் வடக்கு ஆளுநரால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தமை தெரிந்ததே.

இந்த விடயம் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவால் சுட்டிக்காட்டப்பட்ட போது, அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் நடவடிக்கையை நீதி அமைச்சர்மூலம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார் ஜனாதிபதி என்பது தெரிந்ததே.

எனினும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச அன்றைய தினம் அமைச்சர வைக் கூட்டத்திற்குப் பிரசன்னம் தந்திருக்கவில்லை. வெளிநாட்டில் இருந்தார்.நேற்று அமைச்சரவை கூடிய போது தேசிய போக்குவரத்துக் கொள்கை திட்டம் ஒன்று குறித்து அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

சில சேவைகளுக்கான உரிமங்கள் வழங்கும் – மாகாணத்துக்கு பகிரப்பட்ட- உரித்தை தேசிய கொள்கைத் திட்டம் மூலம் மத்திய அரசு பறிக்கும் முயற்சி இது என்று குறிப்பிட்டு, அதற்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தினார் டக்ளஸ் தேவானந்தா.

அச்சமயம் மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் தம்பாட்டில் ஆளுநர் சட்டமாக்கிய விடயத்தையும் அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டார். அதை அடுத்துக் குறுக்கிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த வர்த்தமானி உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவைப் பணித்தார் என்று தெரிய வந்தது.