” மக்களை அச்சுறுத்தி, மின்கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு மக்கள் அடிபணியக்கூடாது.” – என்று பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க நேற்று தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்  மேற்கொள்ளாவிட்டால் அடுத்த வருடம் 8 மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

” ஒரு அலகு மின்சார உற்பத்திக்கு 56.90 ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மக்களிடமிருந்து  29.14 ரூபாவே அறிவிடப்படுகின்றது. இதன்படி ஒரு அலகுக்கு 27 ரூபாவரை வித்தியாசம் உள்ளது. இதனால்  423.5 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியோ அல்லது வேறு வரிகள்மூலமோ வழங்க வேண்டியுள்ளது. திறைசேரியால் தற்போது வழங்க முடியாது.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே   பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் 6 முதல் 8 மணிநேரம்வரை மின்வெட்டு அமுலாகும் என நாடாளுமன்றத்தில் அறிவிப்பு விடுத்து, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். இதனால் அச்சப்பட வேண்டியது மக்கள் அல்ல, அரசியல்வாதிகளே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் 8 மணிநேரம் மின்வெட்டை அமுலாக்கி ஜனாதிபதி (கோட்டாபய),  பிரதமர் (மஹிந்த), நிதி அமைச்சர் (பஸில்) உள்ளிட்ட அரசியல் வாதிகளுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆக மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை.

மின்சார நெருக்கடியை சமாளிக்க மாற்று வழிகள் உள்ளன. நீதியான முறையில் கட்டண உயர்வு இடம்பெற வேண்டும். ” – என்றார்.