ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்,  நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.  அத்துடன், தனக்கான ஆதரவையும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

இதன்படி 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எவ்வித தடையுமின்றி ரணில் அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்  2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) கடந்த நவம்பர் 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

நவம்பர் 15  ஆம் திகதி  முதல்  22 வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்று அன்று  மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 2 ஆம் வாசிப்புக்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 37 மேலதிக வாக்குகளால் 2 ஆம் வாசிப்பு நிறைவேறியது.

இதனையடுத்து நவம்பர் 23 ஆம் திகதி முதல் நேற்று வரை 3 ஆம் வாசிப்பு (குழுநிலை) மீதான விவாதம் நடத்தப்பட்டு மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி, இ.தொ.கா,  தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முஸ்லிம் தேசியக் கூட்டணி என்பன ஆதரவாக வாக்களித்தன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க,  சுயாதீன அணி உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளி, ஜோன் செனவிரத்ன,  பிரியங்கர ஜயரத்ன ஆகியோரும் சார்பாக வாக்களித்தனர்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, விமல் அணி, டலஸ் தரப்பு என்பவற்றின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

பாதீட்டை ஆதரித்து ஆளுங்கட்சியுடன் இணைவார் என கூறப்பட்ட ராஜித சேனாரத்னவும் எதிராக வாக்களித்தார்.

இறுதியில் பாதீடு திருத்தங்கள் சகிதம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். 3 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி மேலதிக 43 வாக்குகளால் நிறைவேற்றம் இடம்பெற்றது.