ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளிற்குமிடையிலான சந்திப்பு நாளை மறுநாள் (13) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்க்க அனைத்து தமிழ் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி, வரும் 13ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களிற்கான கூட்டம் என குறிப்பிடப்பட்டு, இந்த கூட்டத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய 7 கட்சிகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்.

இதுதவிர, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சந்திப்பிற்கு முன்னதாக- பேச்சு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 பங்காளிக்கட்சிகளுடனும் ஜனாதிபதி தனித்தனியாக கலந்துரையாடியுள்ளார். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் அரசு கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் தனித்தனி கலந்துரையாடல்களை நீண்டநேரம் நடத்தியுள்ளார்.