G7, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றால் அறிவிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் மீதான விலை வரம்பை ஆதரிப்பதில்லையென்ற இந்தியாவின் முடிவை வரவேற்பதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பவன் கபூரைச் சந்தித்துப் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

“ஜி7 நாடுகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளால் டிசம்பர் 5 அன்று விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் மீதான விலை வரம்பை ஆதரிக்காத இந்தியாவின் முடிவை துணைப் பிரதமர் வரவேற்றார்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகளுக்கு எரிசக்தி ஏற்றுமதியை பன்முகப்படுத்துவது, எரிசக்தி வளங்களை வழங்குவதற்கான ஒப்பந்தக் கடமைகளை ரஷ்யா பொறுப்புடன் நிறைவேற்றுகிறது என்று நோவக் வலியுறுத்தினார்.

முன்னதாக செப்டம்பரில், G7 நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு விலை வரம்பை விதிக்க ஒப்புக்கொண்டன.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 16.35 மில்லியன் தொன்னாக உயர்ந்துள்ளது.

மாஸ்கோவிற்கும் கியேவிற்கும் இடையே நடந்து வரும் போரையும் மீறி இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோடை காலத்தில், இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் இருந்தது. மேலும், எண்ணெய் பொருட்கள் மற்றும் நிலக்கரி விநியோகம் அதிகரித்துள்ளது.

பவன் கபூருடனான சந்திப்பின் போது, ஒக்டோபர் 11-13, 2023 வரை மொஸ்கோவில் நடைபெற உள்ள சர்வதேச மன்றமான ரஷ்ய எரிசக்தி வாரம் 2023 இல் பங்கேற்க பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு நோவக் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் சாதனை வளர்ச்சியை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் உரம் போன்ற எரிசக்தி வளங்களில் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை அதிகரித்து, தொடர்பைத் தொடர விரும்புவதாக கபூர் மற்றும் நோவக் தெரிவித்தனர்