ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை

அமைச்சுக்களை வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்காலிக அமைச்சரவையை 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் நிறைவேற்றியவுடன் மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தவிர்க்க முடியாத காரணிகளினால் புதிய அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மாதம் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் அமைச்சரவையை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியராச்சி, விமலவீர திஸாநாயக்க, காமினி லொகுகே, எஸ்.எம்.சந்திரசேன, சரத் வீரசேகர மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அநாவசியமானது.

அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் உட்பட பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தியுள்ள நிலையில் அமைச்சரவையை விஸ்தரிப்பது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.