அவதார்’ படமும், அமெரிக்க செவ்விந்தியர்களின் எதிர்ப்புக் குரலும்! – ஒரு பின்புலப் பார்வை

”அவர்கள் எங்களிடமிருந்து அனைத்தையும் பறிந்துக் கொண்டார்கள். அதைக் கொண்டுதான் அமெரிக்காவை எழுப்பினார்கள். அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்..!” என்பது செவ்விந்தியர்கள் வாதம்.

அமெரிக்காவில் உள்ள செவ்விந்திய மக்களுக்கு கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) மீது எப்போதும் வெறுப்பு உண்டு. கொலம்பஸ் அமெரிக்காவின் முதல் தீவிரவாதி, கொடூரமானவர், இன அழிப்பாளர், பூர்வகுடி பெண்களுக்கு எதிரான குற்றங்களை நடத்தியவர், நிலங்களை அபகரித்தவர் என்றே அமெரிக்க செவ்விந்திய மக்கள் இன்றளவும் கொலம்பஸை அடையாளப்படுத்துகிறார்கள்.

நூற்றாண்டு காலமாக கொலம்பஸ் மீது இருக்கும் அதே கோபம், ‘அவதார்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் (James Cameron) மீது அம்மக்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகின்றது. அதன் பொருட்டே ’Avatar: The Way of Water’ படத்திற்கு எதிராக “boycott” என்ற வாதத்தை அமெரிக்க செவ்விந்தியர்கள் கடந்த ஒரு மாதமாகவே எழுப்பி வருகின்றனர். ஆனால், அம்மக்களின் குரல்கள் மறுதலிக்கப்பட்டு உலகம் முழுவதும் கோடிகளை வசூலித்து வருகிறது ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம்.

யார் இந்த செவ்விந்தியர்கள்..?  

மங்கோலியா – ரஷ்யா வழியாக பயணித்து வந்த ஆசியர்கள்தான் செவிந்தியர்கள் என்று அறியப்படுகின்றனர். அமெரிக்காவின் தற்போதுள்ள அலாஸ்கா மாகாண பகுதியிலிருந்து வட அமெரிக்க பகுதிகளில் சுமார் 500-க்கு மேற்பட்ட இனக்குழுக்களாக இம்மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். உண்மையில் நாம் அழைப்பதுபோல் இவர்கள் செவ்விந்தியர்கள் இல்லை. அப்பெயரை அம்மக்களும் விரும்பவில்லை. செவ்விந்தியர்கள் என்று இம்மக்கள் அழைக்கப்பட பல காரணங்கள் கூறப்படுகின்றது. ஆனால், முதன்மையாய் நிற்பது கொலம்பஸின் பெரும் தவறு.

வரலாற்றில் பிரபல காலனித்துவவாதியான இத்தாலியின் கொலம்பஸ் இந்தியாவை நோக்கிய பயணத்தில் வழிதவறி கரீபியன் தீவுகள் வழியாக அலாஸ்காவை வந்தடைந்தாகக் கூறப்படுகின்றது. அங்கிருந்த சிவப்பு சாயம் பூசிய இனக்குழுக்களை கொலம்பஸ் ‘இந்தியர்கள்’ என்று நினைத்தார். ஆனால், இந்தியர்கள் கருப்பு நிறத்தில்தால் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டதை அறிந்து, அவர்களை ‘சிவப்பு இந்தியர்கள்’ (Red Indians) என்று அவர் பதிவு செய்தார். இதன் காரணமாகவே அம்மக்கள் இன்றும் ‘செவ்விந்தியர்கள்’ என்று தாங்கள் விரும்பாத அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஏன் இந்த எதிர்ப்பு?

அவதார்’ படத்தின் இரு பாகங்களிலும் கதையின் கரு என்பது, வட அமெரிக்க பூர்விக மக்களை அடிப்படையாகக் கொண்டுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவதார் முதல் பாகத்தில் பழங்குடி மக்களின் நிலத்தையும், வளத்தையும் அபகரிக்க வரும் மனித இனத்திற்கு எதிராக வெள்ளை நிற இனத்தை சேர்ந்த ஐரோப்பா – அமெரிக்க ஆண் தலைவனாக முன்னிறுத்தப்படுகிறான். இரண்டாம் பாகத்திலும் இதுவே தொடர்கிறது. இந்தப் புள்ளியைதான் அமெரிக்க செவ்விந்தியர்கள் வெறுக்கிறார்கள். எதிர்க்கிறார்கள்.

“அவர்கள் எங்களிடமிருந்து அனைத்தையும் பறிந்துக் கொண்டார்கள். அதைக் கொண்டுதான் அமெரிக்காவை எழுப்பினார்கள். அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்” என்று தீவிர விமர்சனங்களை முன்வைக்கும் செவ்விந்தியர்கள், தங்களது நிலத்தை அபகரித்த இனத்தின் ஒருவர் (கதையின் நாயகன் ஜேக்) படத்தில் தங்களை பாதுகாக்கும் தூதுவனாக முன்னிறுத்தப்படுவதை ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். அத்துடன் தங்களை அமெரிக்கர்கள் என்று நட்பு பாராட்டும் திரையுலகினர் போதிய வாய்ப்பை திரையுலகில் தங்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அம்மக்கள் முன்வைக்கிறார்கள்.

அவதார் மட்டுமல்ல…

அமெரிக்க செவ்விந்தியர்களை பற்றி ஐரோப்பா, அமெரிக்க படங்களிலும், கார்ட்டூன்களிலும் எதிர்மறையாக சித்தரிக்கிறார்கள் என்றும், தங்களை நாகரிகம் அற்றவர்களாகவும், கல்வியற்றவர்களாகவும் சித்தரிக்கிறார்கள் என்ற வருத்தமும், ஏக்கமும் அமெரிக்க செவ்விந்தியர்களிடத்தில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதில் சில ஆக்கபூர்வமான, விதிவிலக்கு படங்களும் உண்டு என்பதை அவர்கள் மறுக்கவில்லை. எனினும். தங்களை தவறுதலாக சித்தரிக்கும் பெரும்பான்மையினரை நோக்கி அவர்களது கேள்வி இம்முறை கூர்மையாக எழுந்திருக்கிறது.

தீரா கோபம்

உலகின் கனவு தேசமாக கருதப்படும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கனவு பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த கால வடுக்கள் இன்னமும் அம்மக்களிடமிருந்து அகலவில்லை. அம்மக்களில் பெரும் சதவீதத்தினர் மன அழுத்ததுடனே பயணிப்பதாக கூறப்படுக்கின்றது. அமெரிக்காவில் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் இனங்களில் செவ்விந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதுமட்டுமல்லாது நீண்ட காலமாக அமெரிக்க அரசால் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாக செவ்விந்தியர்கள் கருதுகிறார்கள்.

மாற்றத்தை விரும்பும் செவிந்தியர்கள் 

தற்கொலைகள், எதிர்மறை எண்ணங்கள், குடிப்பழக்கம் ஆகியவற்றிலிருந்து செவ்விந்தியர்கள் விடுப்பட்டு, அவர்கள் வாழ்வு முன்னேறமடைய அந்த இனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு முயற்சிகளை கடந்த பல ஆண்டுகளாக தீவிரமாக எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறு வாய்ப்புகளை விட்டுவிடாமல் அவற்றை பயன்படுத்தி தங்களது இளைய தலைமுறைகளை முன்மாதிரிங்களாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களின் நம்பிக்கைக்கு சமீப ஆண்டுகளில் நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. விளையாட்டு, கலை என பல துறைகளில் செவிந்தியர்கள் தங்களது பாதையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயணத்தில்தான் ஜேம்ஸ் கேமரூனுக்கு அம்மக்களிடமிருந்து ஒரு செய்தி அனுப்பட்டிருக்கிறது.

“எங்களின் கதைகளை நாங்கள் கூறிக் கொள்கிறோம்… நீல நிறத்தை எங்கள் முகத்தில் பூசாதீர்கள்…” என்பதே அந்தச் செய்தி.