சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையில் பங்குபற்றுகிறார்கள் என்றால் தமிழர்களின் குரலாக, அரசியல் அபிலாசைகளின் இலக்கோடு பங்கு பற்ற வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் நடத்த வேண்டும். அதற்கான திராணி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.


அவரால் இன்று (05.01.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையை தன் காலத்தில் அதுவும் எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்தோடு தீர்ப்பதற்கான திட்டத்தை அறிவிக்கப் போவதாக தற்போதைய ஜனாதிபதி கூறி தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கையில் அண்மையில் சம்பந்தன் அவர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என கூறியிருக்கின்றார். இது தமிழர்களை ஏமாற்றுவதற்கான கூட்டு நரி தந்திர செயற்பாடு என்பதை தமிழர்கள் அறிவர்.


இதற்கு மத்தியில் “தோற்றாலும் வென்றாலும் நாங்கள் பேச்சு வார்த்தைகள் கலந்து கொள்வோம்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேட்டியை வரைந்து கட்டிக்கொண்டு நிற்பது நகைப்பை ஏற்படுத்துகின்றது.
இன்று இனப் பிரச்சினையை தீர்க்கப் போவதாக கூறும் ரணில் தலைமையிலான கட்சி அன்று சந்திரிக்க பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்த தீர்வு திட்டத்தை நாடாளுமன்ற அமர்வின் போதே எரித்து நாடாளுமன்றத்தை அசிங்கப்படுத்தியது. இக் கட்சியினரே யுத்த அழிவிற்கும் அடித்தளமிட்டார்கள்.

இன படுகொலையை நடாத்தி யுத்த வெற்றியென மார் தட்டும் மகிந்த 13 பிளஸ் என உலகையே ஏமாற்றியதையும் நாம் அறிவோம்.தொடர்ந்து நல்லாட்சி அரசு என மேடைக்கு வந்தவர்கள் நிலை மாறு கால நீதி என ஏமாற்றினர். அடுத்ததாக பதவிக்கு வந்த கோத்தாபய ராஜபக்ச “நாட்டில் இனப் பிரச்சினையை பிரச்சனை என்று ஒன்று இல்லை. இருப்பது பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சனையே” என்றார். அதற்கெல்லாம் கைத்தட்டியவர்கள் கொடி தூக்கியவர்கள் தற்போது பேச்சுவார்த்தை தீர்வு என வந்து நிற்பது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை அல்ல. தங்களுடைய பதவியின் மீதும் தங்கள் எதிர் காலத்தின் மீதும் நாடு விழுந்திருக்கின்ற பொருளாதர வீழ்ச்சியிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கும் எடுக்கும் முயற்சியாகும்.


இவர்களோடு எந்த நம்பிக்கையில் தமிழ் தலைமைகள் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளனர் என்பதுவே தமிழர்களின் கேள்வி. அத்தோடு எதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். தந்திர நரிகளோடு பேச்சு வார்த்தைக்கு போய் இறுதியில் துண்டை காணோம், துணியை காணோம் என ஓடிவரும் நிலையே ஏற்படும்.
சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தையில் பங்குபற்றுகிறார்கள் என்றால் தமிழர்களின் குரலாக, அரசியல் அபிலாசைகளின் இலக்கோடு பங்கு பெற்ற வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் நடத்த வேண்டும். அதற்கான திராணி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை. இது வரை காலமும் அவர்கள் அவ்வாறு செய்யவுமில்லை. ரணிலின் அவசரத்துக்கு மத்தியில் இவர்கள் அதனை.செய்யவும் முடியாது. செய்யப் போவதுமில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக தனி நபரால் பட்டப் பகலில் கொள்ளையிடப்படுவதற்கு முன் அது தமிழ் மக்கள் சார்பாக தயாரித்த அரசியல் தீர்வு முன்மொழிவே மக்கள் முன்மொழிவாகும். அதனை மேலும் மக்கள் ஆதரவோடு செம்மைப்படுத்தி பேச்சு வார்த்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதுவே மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும். இதனை செய்ய தவறின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.கடந்த தேர்தலில் வட கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த தண்டனையை மேற்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் அதனைவிட பெரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவருடைய நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் சிக்கிவிடாது கட்சிகளுக்கு வெளியில் இயங்கும் தமிழ் தேசிய ஆதரவாளர்களின் ஆதரவையும் பெற்று மூன்றாம் தரப்பு கூட்டு மத்தியஸ்டத்தை இறைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல முயற்சிக்க வேண்டும்.


இல்லை நாங்கள் பேச்சு வார்த்தைக்கு போவோம். ஆட்சியார்களின் முகத்தை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவோம் என தமிழ் தலைமைகள் கூறுவதாயின் அது தன் தலையிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்டு தமிழ் மக்களை இருண்ட பாதாளத்திற்குள் மீண்டும் தள்ளுவதாகவே அமையும்.


இம்முறை பேச்சுவார்த்தை எனும் கூறும் ரணில் வடகிழக்கிற்கு வெளியிலான சக்திகள், தமிழக சக்திகள், புலம்பெயர் சக்திகள் என அனைத்து தரப்புகளையும் இணைத்துக் கொண்டு தீர்வு என அழுத்தம் கொடுக்க முனைவது அரசியல் தந்திரமாகும் இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நன்குணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.