இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சாளர்கள் குறித்து விமர்சிக்கும் வகையில் பேசி இருக்கிறார். இந்திய அணி 374 ரன்கள் வெற்றிக்காக நிர்ணயித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதலில் தடுமாறியதால் 200 ரன்களுக்கு ஆட்டம் இழந்து விடும் என ரசிகர்கள் கருதினர்.ஆனால் கேப்டன் சானக்க அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதனால் இலங்கை அணி 306 ரன்கள் எடுத்திருந்தது.

ஏதேனும் ஒரு வீரர் சானக்கவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருந்தால் இந்தியா இந்த போட்டியில் தோல்வியை கூட தழுவி இருக்கும். இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் பேட்டிங் செய்யும்போது சிறப்பான தொடக்கத்தை அளித்தோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள்.இதன் மூலம் மற்ற பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடி ரன் சேர்த்தார்கள்.

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை. ஆடுகளம் சூழலும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இருந்தது. பனிப்பொழிவில் பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல.நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியில் உள்ள 11 வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். இன்றைய ஆட்டத்தில் கூட முதல் சில ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அப்போதுதான் கிரிக்கெட்டில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு வெற்றி கிடைத்தால் அதில் அனைத்தும் சரியாக அமையாது. ஒரு அணியாக பல்வேறு இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அணியில் உள்ள 11 வீரர்களும் இணைந்து செயல்பட்டால் தான் அது நடக்கும் என்று ரோஹித் சர்மா கூறினார். இன்றைய ஆட்டத்தில் டாப் 3 வீரர்கள் மட்டுமே பேட்டிங்கில் ரன் சேர்த்தார்கள்.

ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பந்து வீச்சிலும் முகமது சமி 9 ஓவருக்கு 67 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் எடுத்தார். எனினும் அவர் காயத்தில் இருந்து தற்போது அணிக்கு திரும்பி உள்ளதால் இப்படி ரன்கள் கொடுப்பதில் தவறு இல்லை. இதே போன்று ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் 6 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் எடுத்தார்.