தளம்
பிரதான செய்திகள்

5 சதாப்தகால அரசியல் பயணத்தில் ரணிலும் – மஹிந்தவும் முதன்முறையாக ‘தேர்தல் கூட்டு’…!

தமது 53 வருடகால அரசியல் பயணத்தில் – முதன் முறையாக தேர்தலொன்றில் கூட்டாக களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பச்சைக்கொடி இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து குட்டி தேர்தலுக்காக ‘யானை – மொட்டு’ கூட்டணி உதயமாகியுள்ளது. இரு தரப்பு பேச்சுகள் இறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கூட்டணி பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச செயற்பாட்டு அரசியலுக்கு வந்து 53 ஆண்டுகளாகின்றன.

அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் களம் புகுந்தும் 5 சதாப்தங்களாகின்றன.

மஹிந்த ராஜபக்ச சுமார் 49 ஆண்டுகள்வரை அங்கம் வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் அரசியல் களத்தில் கீரியும் பாம்பும்போலவே வலம்வந்தன. இவ்விரு கட்சிகளும் இரு துருவங்களாகவே கருதப்பட்டன.

1948 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் இருந்த – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, அக்கட்சியில் இருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 02 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார்.

1952 இல் நடைபெற்ற 2ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பிரதான இரு கட்சிகளாக இவ்விரு கட்சிகளும் அரசியல் சமரில் ஈடுபட்டன. 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி, சுதந்திரக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1960, 1965, 1970, 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவ்விரு கட்சிகளுக்கிடையில்தான் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான அரசியல் சமர் மூண்டது.

இதில் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவானார்.

1970 இல் ஐக்கிய தேசியக்கட்சியின் களனி தொகுதி அமைப்பாளராக ரணிலின் அரசியல் பயணம் ஆரம்பமானது. 1977 தேர்தலில் அவர் முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1989 முதல் 2015வரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களின்போதும் சுதந்திரக்கட்சிக்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி நிலவியது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில்தான் கடும் சமர். பிரதான இரு வேட்பாளராக இருவரும் களம் கண்டனர்.

மாகாணசபை முறைமை உருவாக்கத்துக்கு பின்னர் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள், 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சிமன்ற தேர்தல்களின்போதும் பிரதான இரு துருவங்களாகவே மஹிந்த அங்கம் வகித்த சுதந்திரக்கட்சியும், ரணில் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல்களை எதிர்கொண்டன.

சுதந்திரத்துக்கு பிறகு இவ்விரு கட்சிகளுக்குமிடையில் தேர்தல் கூட்டணி என்பது சாத்தியப்படாத விடயமாகவே காணப்பட்டது – கருதப்பட்டது. ஏனெனில் இரு கட்சிகளுக்குமிடையிலான கொள்கைகள் ஏழாப்பொருத்தம் எனலாம்.

ரணில் – மஹிந்தவுக்கிடையில் அரசியலுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் சிறந்த நட்பு நீடித்தாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் – குட்டி தேர்தலொன்றில்கூட கூட்டணி அமைத்து களமிறங்கியது கிடையாது.

2015 ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன, பொதுவேட்பாளராக களமிறங்கினார். அத்தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் மஹிந்த களம் கண்டார். மைத்திரி வெற்றிபெற்றார். சு.கவின் தலைமைத்துவத்தையும் மஹிந்த இழந்தார்.

அதன்பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (மொட்டு சின்னம்) உதயமானது. தற்போது மஹிந்த தலைவராக செயற்படுகின்றார். 2018 உள்ளாட்சி தேர்தலில் மொட்டு கட்சி வெற்றி கணக்கை ஆரம்பித்தது. 2019 ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 பொதுத்தேர்தலிலும் அக்கட்சி வெற்றிநடைபோட்டது.

எனினும், 2022 இல் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் மொட்டு கட்சியிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார். மஹிந்தவும் பிரதமர் பதவியை துறந்தார். நாடாளுமன்ற வாக்கெடுப்புமூலம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு மொட்டு கட்சி முழு ஆதரவை வழங்கிவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உள்ளாட்சிமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக்கட்சியும் தீர்மானித்துள்ளன. கண்டி மாநகரசபை, கொழும்பு மாநகரசபை உட்பட ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் யானை சின்னத்திலும், மொட்டு கட்சி செல்வாக்கு செலுத்தக்கூடிய பகுதிகளில் மொட்டு சின்னத்திலும் – அடையாளம் காணப்பட்டுள்ள சபைகளுக்கு பொது சின்னத்திலும் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை ரணில் தெரிவு .!

Fourudeen Ibransa
2 years ago

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேருக்கு கொரோனா.!

Fourudeen Ibransa
3 years ago

IMF அனுமதி இம்மாதம் கிடைக்காது.!

Fourudeen Ibransa
1 year ago