தளம்
இந்தியா

ஆளுநர் மாளிகை முற்றுகை.!

மிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்,  நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்களின் பதவியை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மிரட்டியும், உருட்டியும் அரசியல் குழப்பத்தை நடத்தி வருகின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் ஆளுநர்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி இத்தகைய அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ்.சின் சனாதன கருத்துக்களை பரப்புவது, ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை ஆதரிப்பது, தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றிற்கு  எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை  பேசுவது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசிற்கு மட்டுமே கட்டுப்பட வேண்டுமென்பது, ‘ தமிழ்நாடு’ என்ற பெயரை ஏற்க மறுப்பது,  நீட் விலக்கு,  ஆன்லைன் ரம்மி தடை ஆகிய மசோதாக்கள் உள்ளிட்டு 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது ஆகியவற்றை செய்து வருகிறார். மேலும், ஒரு முழுநேர அரசியல்வாதியாக அரசியலைப்புச் சட்டத்தை மீறி தலையீடுகள் செய்து வருகிறார்.

சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து,  அச்சிட்டு கொடுத்த அறிக்கையை வாசிக்காமல் சில பகுதிகளை நீக்கியும், தனது சொந்த கருத்துக்களை திணித்தும், மதிப்புமிக்க தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமலும், தமிழ்நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாசகங்களையும் வாசிக்காமலும், அவை மரபினை கடைபிடிக்காமலும், சட்டசபையின்  மாண்பிற்கு  களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டு தேசிய கீதம் இசைக்கும்முன் வெளியேறியது என்பது 8 கோடி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்துள்ள மாபெரும் துரோகமாகும். ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தங்களின்படி தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்துகிற வகையில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார் ஆளுநர்.

அவரின் இத்தகைய செயல்களை கண்டித்தும், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரியும், ஒன்றிய பா.ஜ.க அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 20.1.2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு அறைகூவல் விடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!

Fourudeen Ibransa
3 years ago

கேரளாவில் தலைமுடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை..!

Fourudeen Ibransa
1 year ago

போரில்லா உலகம் வேண்டும்!

Fourudeen Ibransa
2 years ago