கட்டுப்பணம் ஏற்றல் பணிகளில் இருந்து விலகுமாறு வெளியிட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது என்பதால் தான் அது மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளார்கள். தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு.ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது குற்றமாகும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றல் பணிகளில் இருந்து விலகுமாறு அறிவித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது என்பதால் அந்த சுற்றறிக்கை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

2017 ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. கட்டுப்பணம் செலுத்தலில் இருந்து விலகுமாறு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு குறுந்தகவல் செய்தி ஊடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆணைக்குழு அதற்கு இடமளிக்கவில்லை.தெரிவத்தாட்சி அலுவலர்கள் முறையாக செயற்பட்டனர்.

தற்போதைய ஆளும் தரப்பினர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலுக்காக குரல் கொடுத்தார்கள்.தேர்தலை பிற்போட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போடப்பட்டுள்ளது. என குற்றஞ்சாட்டி நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்கள், ஆகவே அவர்கள் தற்போது தேர்தலை பிற்போட முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது பாராளுமன்ற தீர்மானத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடலாம்.தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிடப்படுகிறது.குறைந்த செலவில் தேர்தலை நடத்த ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.தேர்தல் செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.