இன்று (14) ஆரம்பமாகும் 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

நான்கு அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் குழு நிலை போட்டிகளில் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் காணும்.

அடுத்த சுற்றிலும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இடம்பெறும் போட்டிகள் முடிவில் இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இதில் இலங்கை இளையோர் அணி ஏ குழுவில் ஆடுவதோடு அந்தக் குழுவில் அமெரிக்காவுடன் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் விஷ்மி குணரத்ன தலைமையில் களமிறங்கும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணியில் அவர் மாத்திரம் தான் சர்வதேச அனுபவம் பெற்ற வீராங்கனையாக உள்ளார்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடக்கூடிய அவர் கடந்த ஜூனில் இந்தியாவுக்கு எதிராக பெற்ற 45 ஓட்டங்களும் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாகும்.

இன்றைய தினத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பங்கேளாதேஷுக்கு எதிரான போட்டியும் ஸ்கொட்லாந்து எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.