சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘ஜெனீவா அழுத்தங்களுக்குப் பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. இறைமையுள்ள நாடு என்றவகையில் ஒருபோதும் அடிபணியாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய முக்கியத்துவத்தைக் கடந்த அரசாங்கம் குறைத்ததாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இதுவே ஆணைக்குழுவின் ஒவ்வொரு பக்கங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை- பிட்டபத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற கிராமத்துடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியுற்றது மாத்திரமின்றி, சர்வதேசத்துக்குச் சென்று ஜெனீவாவின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி, நாட்டின் இறைமை மற்றும் சுயாதீனத்தை முற்றாகச் சீரழித்தனர்.

ஆனால், இணை அனுசரணை வழங்குவதிலிருந்து நாம் விலகியமையை அடுத்தே, எமக்கெதிராக இன்று செயற்படுகின்றனர். ஆனால், ஜெனீவாவின் அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகம் கொடுப்போம்.

வேறு நாடுகளின் புதிய லிபரல் கொள்கையைப் பரப்புவதற்கு அல்லது இந்து சமுத்திரத்தின் பலம் பொருந்திய நாடுகளின் போராட்டங்களுக்குள் அகப்படுவதற்கான தேவை எமக்கில்லை. எனது ஆட்சி காலத்தில் எதிர்கொள்ள நேரிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் திருத்துவதற்கு முயன்றதால் ஏற்பட்டவை.

கடந்த அரசாங்கத்தில் கிராமங்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தில் காடுகளின் மத்தியில் கிராமங்களை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக கேகாலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போது அழிக்கப்பட்ட மரங்கள் தொடர்பில் எவ்வித கதையும் இல்லை.

உலகில் உணவு பாதுகாப்பு இன்று மிகவும் முக்கியமானது. அது எமக்கும் மிகவும் முக்கியமானது. அதற்கு நாம் தயாராகவில்லை என்றால் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

அத்துடன், அதிகாரப் பிரிவினை என்று கூறி, மீண்டும் பிரிவினைவாதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தயாரில்லை. இன்று எமது செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பாரிய போலி பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அன்று மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கச் செய்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம்.” என்றுள்ளார்.