17ஆவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு வடக்கு மாகாணத்தில் இன்று (சனிக்கிழமை) முதன்முறையாக இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்காக போகஸ்வௌ மகா வித்தியாலய வளாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வில், மாவட்டத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.