அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் மீது மர்ம நபர் திடீரென தாக்குதல் நடத்தி முயன்றதில் ஒரு போலீஸ் கொல்லப்பட்டார். அந்த மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்த அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, அமெரிக்கா கொரோனாவுடன் போராடி வரும் நிலையில், தற்போது அந்நாட்டு அதிகாரிகளுக்கு புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

வேகமாக வந்த கார்;

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று வழக்கம் போலப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வேகமாக வந்த கார் நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைய முயன்றது. அங்கிருந்த போலீசார் அந்த காரை நிறுத்த முயன்றனர். இருந்தாலும் அந்த கார் நிற்காமல் அவர்கள் மீது மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கிச் செல்ல முயன்றது, அப்போது அங்கிருந்த தடுப்பு ஒன்றில் கார் மோதி நின்றது. அந்த காரில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் கத்தியுடன் போலீசார் மிரட்டினார். இதனால் போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான நோவா கிரீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கரான அந்த நபர், கறுப்பின தேசியவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார் மோதியதில் போலீசார் ஒருவர் பலியானார். மேலும், காவலர் ஒருவர் படுகாயமடைந்தர்.

இந்தச் சம்பவத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு இல்லை. ஈஸ்டர் விடுமுறைக்காக பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் தற்போது கேம் டேவிட் என்ற இடத்தில் உள்ளார். இந்தத் தாக்குதல் குறித்த தகவல் அறிந்து மனம் உடைந்ததாகவும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் லாக்டவுன் :

இந்தத் தாக்குதலை நடத்திய வோவா கிரீனுக்கும் பயங்கரவாத அமைப்பிற்கும் இதுவரை எவ்வித தொடர்பும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை அடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றியுள்ள இடங்களில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக லாக்டவுன் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்பை தேர்ந்தெடுக்கும் நிகழ்வின் போது, அங்கு திடீரென்று வன்முறை ஏற்பட்டது. டிரம்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் அத்துமாறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில போலீசார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.