ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்களிப்பிலிருந்து விலகியபோதிலும் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் தம்பிதுரை, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசாங்கம் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்திய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தம்பிதுரைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதியான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான அதிகார பகிர்வை உறுதி செய்ய, முன்னர் வாக்குறுதியளித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை, அரசியலமைப்பின் படி தமிழ் மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்த அனைத்து அம்சங்களையும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்ற வகையில் இந்திய அரசாங்கம் தமது நிலைப்பாட்டினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.